அமெரிக்க அதிபர் மாளிகையின் உயரிய விருது பெற்ற இந்திய வம்சாவளிப் பெண்! | White House Recognises Indian - american woman with Prestigious Award

வெளியிடப்பட்ட நேரம்: 17:28 (19/10/2018)

கடைசி தொடர்பு:17:28 (19/10/2018)

அமெரிக்க அதிபர் மாளிகையின் உயரிய விருது பெற்ற இந்திய வம்சாவளிப் பெண்!

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மினல் படேல் டேவிஸ் என்பவருக்கு அமெரிக்க அதிபர் மாளிகை வழங்கும் உயரிய விருது வழங்கப்பட்டிருக்கிறது. 

அமெரிக்க அதிபர் மாளிகையின் விருது பெற்ற மினல் படேல் டேவிஸ்

Photo Credit: Facebook/Lakewood Missions

அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் அமைந்துள்ள ஹூஸ்டன் நகரில் வசித்து வருபவர் மினல் படேல் டேவிஸ். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மினல், அந்நகரில் ஆள் கடத்தலுக்கு எதிரான பல்வேறு தொடர் நடவடிக்கைகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறார். அமெரிக்காவில் ஆள் கடத்தல் அதிகம் நடைபெறும் முக்கியமான மாகாணங்களுள் ஒன்றான டெக்ஸாஸ் இருந்து வருகிறது. மினல் படேல் டேவிஸின் செயல்பாடுகளைப் பாராட்டி ஆள்கடத்தலுக்கு எதிரான நடவடிக்கைக்கான ஹூஸ்டன் நகர மேயரான சில்வஸ்டர் டர்னரின் சிறப்பு ஆலோசகராக கடந்த 2015-ம் ஆண்டு அவர் நியமிக்கப்பட்டார். 

மினல் படேல் டேவிஸின் சிறப்பான செயல்பாடுகளை அங்கீகரிக்கும் விதமாக அமெரிக்க அதிபர் மாளிகை, ஆள்கடத்தலுக்கு எதிராகச் சிறப்பாகப் போராடியதற்காக விருது கொடுத்து கௌரவித்துள்ளது. இந்தப் பிரிவில் அமெரிக்க அதிபர் மாளிகை அளிக்கும் உயர்ந்த விருது இதுவே. ஆள்கடத்தலுக்கு எதிராக அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் பாம்பியோ தலைமையிலான நடவடிக்கைக் குழுவின் உறுப்பினரான மினலுக்கு இந்த விருது சமீபத்தில் அளிக்கப்பட்டிருக்கிறது. 

விருது குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள மினல், `இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக என் பெற்றோர் இந்தியாவிலிருந்து வந்திருக்கிறார்கள். என் குடும்பத்தைப் பொறுத்தவரை அமெரிக்காவில் பிறந்த முதல் நபர் நான்தான். இந்தநிலையில், ஹூஸ்டர் மேயர் அலுவலகப் பணியில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் நான் பணியமர்த்தப்பட்டேன். தற்போது வெள்ளை மாளிகையின் விருதுவரை வந்துள்ளது அளவில்லா மகிழ்ச்சியை அளித்திருக்கிறது’’ என்றார்.