`நெற்றியைக் குறிபார்த்து சுடு!' - யானைகளை வேட்டையாடும் கொடூரக் கும்பல் #Viral | Elephants charge hunters as they shoot member herd in Namibia

வெளியிடப்பட்ட நேரம்: 18:30 (19/10/2018)

கடைசி தொடர்பு:18:30 (19/10/2018)

`நெற்றியைக் குறிபார்த்து சுடு!' - யானைகளை வேட்டையாடும் கொடூரக் கும்பல் #Viral

யானை

Picture Credits : News 24 Video

உலகம் முழுக்க யானைகளைப் பாதுகாக்க வேண்டும் என்கிற வகையில் பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பல நாடுகள் தீவிரமாக எடுத்து வருகின்றன. இந்த நிலையில் கிழக்கு ஆப்ரிக்காவின் நமீபியா நாட்டில் இருவர் சேர்ந்து யானையை வேட்டையாடும் காணொலி ஒன்று இப்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் காணொலி சமூகநல ஆர்வலர்கள் மற்றும் விலங்குகள் நல ஆர்வலர்கள் மத்தியில் விவாதப் பொருளாக மாறியிருக்கிறது.

நமீபியாவின் வடகிழக்கு நமீபியாவில் உள்ள Nakabolelwa Conservancy என்கிற இடத்தில் இந்தக் காணொலி எடுக்கப்பட்டிருக்கிறது. கூட்டமாக இருக்கும் யானைக்கூட்டத்தைப் பார்த்து இருவரும் துப்பாக்கியால் சுடுகின்றனர். அந்த யானைகள் பிளிறிக்கொண்டே ஓடுகின்றன. அதில் குண்டுபட்ட ஆண் யானை ஒன்று தனியாகக் கூட்டத்தைவிட்டுப் பிரிந்து செல்கிறது. அப்போது வேட்டையாடுபவரில் ஒருவர் “யானையின் நெற்றியைக் குறிவைத்து சுடு” என்கிறார். அடுத்தடுத்து பாய்ந்த துப்பாக்கிக் குண்டுகள் யானையைப் பதம்பார்க்க யானை சரிந்து விழுவதோடு அந்தக் காணொலி முடிகிறது.  நான்கு ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்ட காணொலி தற்போது வெளியாகி உலகம் முழுக்க பல அதிர்வுகளை ஏற்படுத்தியிருக்கிறது. நமீபியாவில் இருக்கிற பல நிறுவனங்கள் சுற்றுலா வரும் பயணிகளுக்கு விலங்குகளை வேட்டையாடும் வசதியைச் செய்து கொடுக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.