வெளியிடப்பட்ட நேரம்: 20:30 (19/10/2018)

கடைசி தொடர்பு:20:30 (19/10/2018)

நிலவுக்குச் சவால்விடும் சீனாவின் புதிய திட்டம்!

செயற்கை நிலவை விண்ணுக்கு அனுப்ப சீனா விஞ்ஞானிகள் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சீனா

ரஷ்யா, அமெரிக்காவுக்கு இணையாகத் தன்னை வான்வெளி ஆராய்ச்சியில் நிலைநிறுத்திக் கொள்ளத் தொடர்ந்து முயன்று வருகிறது சீனா. நிலவு குறித்த பல்வேறு ஆய்வுகளை முன்னெடுத்து வரும் சீனா, தற்போது செயற்கை நிலா முயற்சியைக் கையில் எடுத்திருக்கிறது. சூரியனிடமிருந்து ஒளியைக் கிரகித்து, பின்னர் அதைப் பூமிக்கு பாய்ச்சும் நிலவின் செயல்பாடுகளைப் பிரதிபலிக்கும் வகையில், செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்தி அதன் மூலம் பூமியை ஒளிர்விக்கச் செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. அதன் மூலம் பூமியை ஒளிர்விக்கச் செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. சீனாவின் இந்த முயற்சி வெற்றி பெற்றால், ஒரு நகரத்தின் மின் தேவையை பூர்த்தி செய்ய இயலும். பூமிக்கு மேல் 500 கிலோமீட்டர் தொலைவில் நிலைநிறுத்தப்படும் இந்த செயற்கை நிலவால், 10 முதல் 80 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு ஒளியைப் பாய்ச்ச முடியுமாம். இயற்கை பேரிடரால் மின் தடை ஏற்படும் பகுதிகளிலும் இரவு நேரங்களிலும் இந்த செயற்கை நிலவு மூலம் ஒளியைக் கொடுக்க முடியும் என்கிறார்கள் சீன விஞ்ஞானிகள். அடுத்த 4 ஆண்டுகளில் 3 செயற்கை நிலவுகளை விண்வெளிக்கு அனுப்ப சீனா திட்டமிட்டிருக்கிறது.

சீனா அரசுப் பத்திரிகையான பீப்பிள்ஸ் டெய்லியில் இதுகுறித்த செய்தி வெளியாகியிருக்கிறது. இதுகுறித்து பேசிய செங்டு விண்வெளிஆய்வு மைய இயக்குநர் `வு செங்ஃபெங்’, ``செயற்கை நிலவு வெளிப்படுத்தும் ஒளியின் அளவு (Brightness) மற்றும் செயல்படும் நேரம் (service time) ஆகியவற்றை நாம் பூமியில் இருந்தே இயக்க முடியும். அதேபோல், ஒளி பாய்ச்சப்பட வேண்டிய பரப்பளவினை மீட்டர்கள் அளவில் நம்மால் கட்டுப்படுத்த முடியும்’’ என்று தெரிவித்துள்ளார்.

மேலும், செங்டு நகரின் 50 சதுரகிலோ மீட்டர் பரப்பளவுக்கு இந்த செயற்கை நிலவு மூலம் ஒளியூட்ட முடியும் என்று கூறியுள்ள அவர், இதனால் ஆண்டு ஒன்றுக்கு ஏறக்குறைய 240 மில்லியன் டாலர்கள் மிச்சமாகும் என்றும் கூறியிருக்கிறார் . இந்தச் செலவு ஒரு நகரத்தின் தெருவிளக்குகளுக்குத் தேவைப்படும் மின்சாரப் பயன்பாட்டின் அளவாகும். இந்தச் செயற்கை நிலா என்றழைக்கப்படும் ஒளியூட்டும் செயற்கைக் கோளின் முன்னோட்டம் 2020-ம் ஆண்டு நிகழ்த்தப்படும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்த முயற்சியைப் போலவே சூரிய ஒளியைக் கண்ணாடிகளில் பிரதிபலித்து ஒரு பெரும் நிலப்பரப்புக்கு ஒளியூட்டும் முயற்சியை ரஷ்யா விஞ்ஞானிகள் 1990-ம் ஆண்டு செய்தது குறிப்பிடத்தக்கது.