வெளியிடப்பட்ட நேரம்: 14:20 (20/10/2018)

கடைசி தொடர்பு:14:50 (20/10/2018)

60 ஈபிள் டவர்களின் இரும்பு, கட்டுமானத்தின் உச்சம்... சீனா கட்டிய 55 கி.மீ பாலம்!

சீனா மற்றும் ஹாங்காங்கை இணைக்கும் வகையில் 7 ஆண்டுகளாகக் கட்டப்பட்டு வந்த உலகின் மிக நீளமான பாலம் வரும் 24-ம் தேதி போக்குவரத்துக்கு திறக்கப்படுகிறது. சீனாவின் தென்பகுதியில் உள்ள ஷூஹாய் நகரத்தை ஹாங்காங் மற்றும் மக்காவு பகுதியுடன் இணைக்கும் வகையில் 2009-ம் ஆண்டு பாலம் கட்டத் திட்டமிடப்பட்டது. இந்த ஆறு வழிப்பாலத்துக்காக 4 செயற்கைத் தீவுகள் ஏற்படுத்தப்பட்டன. 4 சுரங்கங்களும் உள்ளன. இந்தப் பாலம் மொத்தம் 55 கிலோ மீட்டர் நீளம் கொண்டது. இதைக் கட்ட 4,20,000 டன் இரும்பு பயன்படுத்தப்பட்டுள்ளது. 60 ஈபிள் டவர்கள் இந்த இரும்புகளைக் கொண்டு கட்டலாம். 

சீனா

பிரிட்டன், அமெரிக்கா, டென்மார்க், ஜப்பான் உள்ளிட்ட 14 நாட்டு நிபுணர்கள் கட்டுமானத்துக்கு உதவியாக இருந்துள்ளனர். சீனாவில் இருந்து ஹாங்காங், மக்காவு பகுதிகளுக்குச் செல்ல 3 மணி நேரம் ஆகும். பாலம்  கட்டப்பட்டதால் 45 நிமிடங்களில் சென்று விடலாம். 15 பில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவில் கட்டப்பட்டுள்ள இந்தப் பாலத்தை வெளிநாட்டு மீடியா குழுவினருக்கு சீன அதிகாரிகள் அழைத்துக் காட்டினர். நாள் ஒன்றுக்கு 40,000 வாகனங்கள் இதில் வழியாகச் செல்லும். ஆயுள்காலம் 120 ஆண்டுகள் ஆகும். வரும் 24-ம் தேதி மக்கள் பயன்பாட்டுக்காகத் திறக்கப்படுகிறது. பாதசாரிகள் அனுமதிக்கப்படமாட்டார்கள், மோட்டார் சைக்கிள்களுக்கும் அனுமதி கிடையாது. பேருந்துகள், கார்களுக்கு மட்டுமே அனுமதி. 

சீனா கட்டிய கடற்பாலம்

பிரிட்டன் காலனியாக இருந்த ஹாங்காங் 1997-ம் ஆண்டு மீண்டும் சீனாவிடம் ஒப்படைக்கப்பட்டது. சீனாவுடன் ஹாங்காங் இணைந்தாலும் அந் நாட்டுக்குத் தனியான அரசியல் அமைப்புச் சட்டம்  உள்ளது. ஏற்கெனவே உலகின் மிக நீளமானப் பாலமும் சீனாவில்தான் உள்ளது. ஹிங்டோ மற்றும் ஹங்டோ நகரங்களுக்கு இடையே கட்டப்பட்ட இந்தப் பாலம் 42 கி.மீ தொலைவு கொண்டது. தற்போது, ஷூஹாய் - ஹாங்காங்  உலகின் மிக நீளமாக கடல்பாலம் என்ற அந்தஸ்தைப் பெற்றுள்ளது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க