`சர்ஃபிங்கின்போது கையைக் கடித்த சுறா’ - பதில் தாக்குதலால் மீண்டு வந்த 51 வயது வீரர்! | Australian surfer escapes from shark attack

வெளியிடப்பட்ட நேரம்: 17:20 (20/10/2018)

கடைசி தொடர்பு:17:20 (20/10/2018)

`சர்ஃபிங்கின்போது கையைக் கடித்த சுறா’ - பதில் தாக்குதலால் மீண்டு வந்த 51 வயது வீரர்!

ஆஸ்திரேலிய கடற்கரை ஒன்றில், அலைச்சறுக்கு விளையாட்டில் ஈடுபட்ட வீரர் ஒருவர், தன்னைக் கடித்த சுறாவுடன் தீரமாகப் போராடி மீண்டிருக்கிறார். 

சுறாவுடன் போராடி மீண்ட பால் கென்னி

Photo Credit: Twitter/@ajscully

சிட்னியில் இருந்து 200 கி.மீ தொலைவில் உள்ள சாமுராய் கடற்கரையில், பால் கென்னி என்பவர் மற்றவர்களுடன் இணைந்து அலைச் சறுக்கு விளையாட்டில் ஈடுபட்டுவந்திருக்கிறார். அப்போது, எதிர்பாராதவிதமாக சுறா ஒன்று அவரது வலது கையைக் கடித்திருக்கிறது. இதனால் அதிர்ச்சியடைந்த கென்னி, வலியால் துடித்திருக்கிறார். உதவிக்கு யாரும் இல்லா நிலையில், துணிச்சலாக முடிவு எடுத்த பால் கென்னி, மற்றொரு கையால் அந்தச் சுறாவை தாக்கத் தொடங்கியிருக்கிறார். தொடர்ந்து தாக்கவே, ஒரு கட்டத்தில் சுறா பிடியைத் தளர்த்தியிருக்கிறது. இதையடுத்து துரிதமாகச் செயல்பட்ட கென்னி, உடனடியாக அந்தப் பகுதியை விட்டு அகன்று கரையேறியிருக்கிறார். கரையில் இருந்தவர்கள் அவருக்கு முதலுதவி செய்ததுடன், மருத்துவமனையில் அனுமதித்திருக்கின்றனர். 

அந்தச் சம்பவம்குறித்து நினைவுகூர்ந்த பால் கென்னி, ``அலையில் சறுக்கி விளையாடிக்கொண்டிருந்தபோது, திடீரென ஒரு பொருள் மீது எனது தலை இடித்தது. அது ஒரு சுறா என நான் முடிவுக்கு வரும் முன்னர், அது என் வலது கையைக் கடித்துவிட்டது. அந்தச் சூழ்நிலையில், மற்றவர்களிடம் உதவி கோர அதிக நேரம் எனக்குக் கிடைக்கவில்லை. இதனால், அந்தச் சுறாவுடன் நானே போராடுவது என முடிவுசெய்தேன். வலது கையை சுறா கடித்திருந்த நிலையில், எனது இடது கையால் சுறாவைத் தாக்கத் தொடங்கினேன். விடா முயற்சியுடன் நான் தாக்கவே, அந்தச் சுறா எனது கையை விட்டுவிட்டது. கரையில் இருந்து சுமார் 50 மீட்டர் தொலைவில் இந்தச் சம்பவம் நடந்தது. போதிய அளவு தண்ணீர் இல்லாததால், எனது கையை விட்டுவிட்டு ஆழமான கடல்பகுதிக்கு சுறா திரும்பச் சென்றிருக்கலாம் என நான் நினைக்கிறேன். கடல்வாழ் உயிரினங்களை நாம் தொந்தரவு செய்யாதவரை அவை நம்மைத் தாக்க முற்படாது. சுறாவின் வாழ்விடத்தில் மனிதர்கள் புகுந்தால், அவை தற்காப்புக்காக தாக்கவே முற்படும்’’ என்றார். 

51 வயதான பால் கென்னி, அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறார். வலது கையில் அவருக்கு 21 தையல்கள் போடப்பட்டுள்ளன. சுரங்கத் தொழிலாளியான பால் கென்னி, அலைச்சறுக்கு விளையாட்டில் ஈடுபடுவர்களுக்குப் பயிற்சியும் அளித்துவருகிறார். 20 டன் எடைகொண்ட திமிங்கிலம் ஒன்று இறந்தநிலையில் கரை ஒதுங்கியதால், கடந்த சில நாள்களாக அந்தக் கடற்கரைக்குச் செல்ல மக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. திமிங்கிலத்தின் உடல் அகற்றப்பட்ட பின்னர், கடந்த வெள்ளிக்கிழமைதான் மக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.