ஒரு வருடத்தில் 571 மில்லியன் டாலர் கிரிப்டோகரன்சி - அரசு ஏஜென்சிகளில் வடகொரிய ஹேக்கர்கள் கைவரிசை! | North Korean hacker group Stole Cryptocurrencies worth $571 Million

வெளியிடப்பட்ட நேரம்: 05:45 (21/10/2018)

கடைசி தொடர்பு:05:45 (21/10/2018)

ஒரு வருடத்தில் 571 மில்லியன் டாலர் கிரிப்டோகரன்சி - அரசு ஏஜென்சிகளில் வடகொரிய ஹேக்கர்கள் கைவரிசை!

டிஜிட்டல் என்று வந்து விட்டால் பாதுகாப்பு விஷயத்திற்கு யாருமே உத்தரவாதம் அளிக்க முடியாது. எவ்வளவுதான் கவனமாக பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்திருந்தாலும் கூட அதை உடைப்பதற்கு ஹேக்கர்கள் ஒவ்வொரு முறையும் புதிய வழிகளை கண்டுபிடித்துக் கொண்டுதான் இருப்பார்கள்.

ஹேக்கர்

எனவே டிஜிட்டல் உலகில் சைபர் தாக்குதல்கள் எல்லாம் சர்வ சாதாரணமாக நிகழும். தாக்குதலை நடத்துபவர்கள் அதன் மூலமாக ஒரு பெரும் ஆதாயத்தை அடைவார்கள். அது போல வட கொரிய ஹேக்கர் குழு ஒன்று சைபர் தாக்குதல்கள் மூலமாகத் திருடிய கிரிப்டோகரன்சிக்களின் மதிப்பை Group-IB என்ற இணையப் பாதுகாப்பு அமைப்பு ஒன்று வெளியிட்டிருக்கிறது. லாசரஸ் (Lazarus) என்ற பெயரில் அழைக்கப்படும் அந்த ஹேக்கர் குழு வட கொரியாவை மையமாக வைத்துச் செயல்பட்டு வருகிறது. இந்த வருடத்தின் ஜனவரி மாதம் தொடங்கி இவர்கள் 571 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான கிரிப்டோகரன்சிகளை திருடியிருக்கிறார்கள்.

அதற்காக உலகம் முழுவதிலுமுள்ள வங்கிகள் மற்றும் அரசு ஏஜென்சிகளில் நடந்த பணப் பரிமாற்றங்களிலும் தங்களது வேலையைக் காட்டியிருக்கிறது லாசரஸ் ஹேக்கர் குழு. இதற்கு முன்னரும் பல சைபர் அட்டாக்குகளில் இந்தக் குழுவிற்கு பங்குள்ளது குறிப்பிடத்தக்கது. 571 மில்லியன் அமெரிக்க டாலர் என்பது இந்திய ரூபாய் மதிப்பில் கிட்டத்தட்ட நாலாயிரம் கோடிக்கு சமமாகும். இதற்காக 14-கும் மேற்பட்ட சைபர் தாக்குதல்களை இந்தக் குழு நடத்தியிருக்கிறது.