வெளியிடப்பட்ட நேரம்: 14:13 (21/10/2018)

கடைசி தொடர்பு:14:13 (21/10/2018)

கிளிண்டன்.. புஷ்.. ட்ரம்ப்... அலற விடும் நீதிபதி ப்ரெட் கவனா! யார் இவர்?

கிளிண்டன்.. புஷ்.. ட்ரம்ப்... அலற விடும் நீதிபதி ப்ரெட் கவனா! யார் இவர்?

டந்த சில நாள்களாக உலகளவில் பரபரப்பாகப் பேசப்பட்டு வரும் பெயர் கவனா. அமெரிக்க உச்சநீதிமன்ற நீதிபதியாக ப்ரெட் கவனா (Brett Kavanaugh) நியமிக்கப்பட்டது முதல் பல்வேறு நேர்மறை, எதிர்மறை விஷயங்கள் அவரைச் சுற்றி வட்டமடித்துக்கொண்டிருக்கின்றன. நீதிபதி பதவிக்கு அதிபர் டிரம்ப்பால் முன்முன்மொழியப்பட்டது முதல் பதவியேற்றது வரை அமெரிக்க பத்திரிகைகளின் ஹாட் நியூஸ் கவனாதான். இந்நிலையில், முன்னாள் அமெரிக்க அதிபர் ஜிம்மி கார்ட்டர், நீதிபதி கவனா பற்றி வெளியிட்டுள்ள கருத்து சர்ச்சையையும் கிளப்பியுள்ளது. "உச்சநீதிமன்ற நீதிபதியாக இருப்பதற்கு கவனா 'அன்ஃபிட்' ஆனவர்" எனக் காட்டமாகக் கூறியிருக்கிறார் ஜிம்மி கார்ட்டர். ஒரு நீதிபதியைச் சுற்றி இத்தனை சச்சரவுகள் ஏன்.. யார் இந்த ப்ரெட் கவனா?

1965ம் ஆண்டு அமெரிக்க தலைநகரான வாஷிங்டனில் பிறந்தவர் கவனா. பாஸ்கெட் பாலில் மிகவும் ஆர்வம்கொண்ட கவனா 'யேல்' பல்கலைக்கழகத்தில் படிக்கும்போதும் தொடர்ந்து தன் விளையாட்டில் ஆர்வம் செலுத்தி வந்தார். மேலும், யேல் பல்கலைக்கழகத்தால் வெளியிடப்படும் தினசரி நாளேட்டில் தன் விளையாட்டைப் பற்றி தொடர்ந்து எழுதியும் வந்தார். 1987ம் ஆண்டு ஹானர்ஸ் பட்டமும், பிறகு1990 ஆண்டு யேல் சட்டப்பள்ளியில் சட்டமும் படித்து வெளியேறியவர், 1990ல் 'வால்ட்டர் கிங் ஸ்டாப்லெட்டான்' என்ற நீதிபதிக்கு எழுத்துப்பணிக்காகச் சேர்ந்தார். தொடர்ந்து பல்வேறு வழக்குகளில் பணியாற்றிய அவர், 2000ம் ஆண்டு அதிபர் தேர்தலில் புளோரிடா மாகாணத்தின் வாக்கெடுப்பு சர்ச்சையின்போது ஜார்ஜ் புஷ்ஷுக்கு ஆதரவான சட்டக்குழுவில் பணியாற்றினார். 2001ம் ஆண்டில் அமெரிக்க அதிபராக புஷ் பதவியேற்க, 2003ல் புஷ்ஷின் உதவியாளராகவும், வெள்ளை மாளிகைப் பணியாளர்களின் செயலாளராகவும் நியமிக்கப்படுகிறார். 
நெருக்கமான பழக்கம் காரணமாக 'கொலம்பிய மேல் முறையீட்டு நீதிமன்றத்தின்' நீதிபதியாக கவனாவை பரிந்துரைக்கிறார் புஷ். பல்வேறு சிக்கல்களைக் கடந்து 2006ம் ஆண்டு நீதிபதியாகப் பதவியேற்ற கவனா, 2018 வரை பதவியில் தொடர்ந்தார்.

முன்னாள் அமெரிக்க அதிபர் பில் க்ளிண்டன் மீதான பாலியல் குற்றச்சாட்டும், வழக்கும் இன்றளவும் பரபரப்பாகப் பேசப்பட்டு வரும் ஒரு சம்பவம். 1998ம் ஆண்டு க்ளிண்டன், 'மோனிகா லெவின்ஸ்கி' என்ற வெள்ளை மாளிகை பணியாளரிடம் பாலியல் ரீதியாக அத்துமீறி நடந்துகொண்டதாகப் புகார் எழுந்தது. அந்த வழக்கை விசாரிக்கும் 'கென்னத் ஸ்டார்' தலைமையிலான விசாரணைக் குழுவில் கவனாவும் ஒருவர். 'வெள்ளை மாளிகையில் க்ளிண்டன் செய்ததை வரைகலையாக விளக்க வேண்டும்' என்றும் மேலும், பல பரிந்துரைகளைக் குறிப்பாணையில் தலைமையாளர் ஸ்டாருக்கு அனுப்பி அழுத்தம் கொடுத்தார் கவனா. பிறகு, பாதிக்கப்பட்ட பெண்ணின் நேரடி சாட்சி மூலம் க்ளிண்டனின் குற்றம் நிரூபிக்கப்பட்டது. ஆரம்ப காலங்களிலேயே அதிபருக்கு எதிரான வழக்கில் பணியாற்றிய முக்கியப் புள்ளியாக இருந்துள்ளார் கவனா. குடியேற்ற ஆவணம் இல்லாத மெக்சிகோ அகதி பெண் ஒருவர், கருக்கலைப்பு செய்ய விரும்பியதால் அவருக்கு நீதிமன்றம் அனுமதியளித்தது. இதை எதிர்த்தார் பழைமைவாதியான கவனா. 'குற்ற வழக்கு விசாரணை மற்றும் குடிமை வழக்கிலிருந்து ஆளும் அதிபருக்கு விலக்கு அளிக்க வேண்டும்' என்று 2009ம் ஆண்டு இவரின் 'மினசோட்டா' சட்ட மறு ஆய்வுக்கட்டுரையில் எழுதியிருந்தார். 'இது தவறு செய்பவர்களைப் பாதுகாப்பதுபோல் அமைந்துவிடும்' என கவனாவை சர்ச்சைகள் சுற்றின.

நீதிபதி கவனா

சமீபத்தில் அமெரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதி அந்தோணி கென்னடியின் ஓய்வை அடுத்து அந்த இடத்திற்கு மற்றொரு நீதிபதியை நியமிக்க வேண்டும். 'கொலம்பிய மேல்முறையீட்டு நீதிமன்ற' நீதிபதியான கவனாவை அதிபர் டொனால்டு ட்ரம்ப் பரிந்துரைத்தார். செனட் தேர்விற்கு கவனா தயாரான சமயத்தில், உளவியல் பேராசிரியை கிறிஸ்டியன் பிளாசே போர்ட் என்ற பெண், கவனா மீது பாலியல் குற்றச்சாட்டை பதிவு செய்தார். இதுகுறித்து அவர், 'அப்பொழுது எனக்கு 15 வயது, கவனாவிற்கு 17 வயதிருக்கும். இருவரும் ஜார்ஜ் டவுன் பெப் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தோம். ஒரு நாள் கவனாவும் அவர் நண்பரும் பாலியல் ரீதியாக தொந்தரவு செய்தனர். இப்படிப்பட்ட ஒருவர் எப்படி ஒரு நாட்டின் உச்சநீதிமன்ற நீதிபதியாகும் தகுதியைப் பெற முடியும்' என்றார். 

மேலும், கவனாவுடன் 'யேல் பல்கலைக்கழக'த்தில் படித்த டெமோரா ராமிரேஜ் என்ற பெண், 'கல்லூரி விழாக்களின் போது ஆடைக் கலைத்து தொந்தரவு தருவார். வீடுகளில் நடந்த விழாக்களின்போது போதை மருந்து கொடுத்து பெண்களுக்கு பாலியல் தொல்லை தருவார்' என்று நீதிபதி கவனா மீது பாலியல் குற்றச்சாட்டை வைத்தனர். மொத்தம் மூன்று பெண்கள் கவனா மீது புகார் கூறினார்கள். 'கவனா ஒரு பழைமைவாதி. இவர் அதிகாரத்திற்கு வந்தால் பழைமைவாதத்திற்கு ஆதரவாக செயல்படுவார்' என்ற கூடுதல் கருத்தும் உண்டு. இதனால், 'கவனாவின் பரிந்துரையை ட்ரம்ப் திரும்பப் பெற வேண்டும், அவர் மீது விசாரணை தேவை' என சமீபகாலமாக எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சி உட்பட பலர் போராடி வருகின்றனர்.

'நான் நீதிபதியாக ஆகக்கூடாது என்பதற்காக எதிர்க்கட்சிக்காரர்கள் செய்யும் சதி' என இந்தக் குற்றச்சாட்டுகளை கவனா முற்றிலும் மறுக்கிறார். 'பாலியல் தொல்லைக்கு ஆளானால் அந்தப் பெண்கள் அப்போதே போலீஸில் புகார் அளித்திருக்கலாமே. இப்பொழுது ஏன் சொல்கிறார்கள். கவனா உண்மையானவர், நேர்மையானவர். அவரைப் பழி வாங்குவதற்காக யாரும் அரசியல் செய்ய வேண்டாம்' என்று தன் முடிவில் பிடிவாதமாக உள்ளார் ட்ரம்ப்.

அனைத்து பிரச்னைகளையும் கடந்து கடந்த 6ம் தேதி நடந்த வாக்கெடுப்பில் வெற்றிபெற்று உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவியேற்றுக்கொண்டார் கவனா. கருக்கலைப்பு, மரண தண்டனை, குடியேற்ற கொள்கை, இன பாகுபாடு குறித்த முதன்மையான அடிப்படை பிரச்னைகளை விசாரிக்கும் நீதிபதிகளில் ஒருவராக இணைந்துள்ளார் பழைமை விரும்பி பிரெட் கவனா!