வெளியிடப்பட்ட நேரம்: 20:35 (21/10/2018)

கடைசி தொடர்பு:09:58 (22/10/2018)

`உலகப் பெருங்கடல்களின் ஆழமான பகுதிகளுக்கு விசிட்!’ - மனிதகுலத்தின் முதல் முயற்சி

உலகின் 5 பெருங்கடல்களின் ஆழமான பகுதிகளுக்குச் செல்லுவதற்கான ஆய்வை விஞ்ஞானிகள் தொடங்கியிருக்கின்றனர்.   

கடல்

`Five Deeps Expedition’ என்ற பெயரில் தொடங்கப்பட்டிருக்கும் இந்தப் பயணத்துக்கென 2 பேர் மட்டும் அமரக்கூடிய வகையில் பிரத்யேகமாக கடலில் மூழ்கும் வாகனம் தயாரிக்கப்பட்டிருக்கிறது. தரையில் இருந்து 9 கி.மீ ஆழத்தில் ஏற்படக்கூடிய அழுத்தத்தையும் தாங்கும் வகையில், டைட்டானியம் உள்ளிட்ட சிறப்பு உலோகங்கள்மூலம் அந்த வாகனம் தயாராகிவருகிறது. அதை உருவாக்க, குறைந்தது 3 ஆண்டுகள் ஆகும் என்கிறார்கள். இந்த வாகனத்தை விக்டர் வெஸ்கோவா என்பவர் இயக்க இருக்கிறார். 

இதுகுறித்துப் பேசிய அவர், ``தொழில்நுட்பத்தின் வளர்ச்சியை அடுத்தகட்டத்துக்கு எடுத்துச் செல்லும் முயற்சியில் நானும் எனது குழுவினரும் இணைவது மகிழ்ச்சி அளிக்கிறது. நாம் வாழும் உலகைப் புரிந்துகொள்வதற்கு மனித குலத்துக்கு இந்தப் பயணம் பயனளிக்கும் என்று நம்புகிறேன்’’ என்று நம்பிக்கை தெரிவித்திருக்கிறார். உலகின் மிகவும் உயரமான 7 சிகரங்களின் உச்சிக்குச் சென்றுள்ள விக்டர், உலகின் இருமுனைகளான வடதுருவம் மற்றும் தென்துருவம் ஆகியவற்றுக்கும் பயணித்திருக்கிறார். 

அந்த வாகனத்தைத் தயாரித்திருக்கும் ட்ரைட்டன் சப்மரைன்ஸ் எல்.எல்.சி நிறுவனம், அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்குகிறது. கடலில் 36,000 அடி ஆழத்துக்கு மனிதர்களைக் கொண்டுசெல்லும் வகையிலான மூழ்கிகளுக்கான சான்றிதழ், அந்த ஒரு மூழ்கிக்கு மட்டுமே இருப்பதாக அந்த நிறுவனம் தெரிவித்திருக்கிறது. மனிதர்களின் முதல் முயற்சியான இதை டிஸ்கவரி மற்றும் சயின்ஸ் ஆகிய தொலைக்காட்சிகள் ஆவணப் படமாகத் தயாரிக்க இருக்கின்றன. அந்தப் படம், 2019-ம் ஆண்டு ஒளிபரப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.