வெளியிடப்பட்ட நேரம்: 04:30 (22/10/2018)

கடைசி தொடர்பு:07:57 (22/10/2018)

‘5 கிலோ எடை கொண்ட அரியவகை விண்கல்’- நான்கு கோடிக்கு ஏலம்!

பூமியை நோக்கி சில சமயங்களில் விண்கற்கள் வருவதுண்டு. ஆனால் அவை அனைத்துமே தரையை அடைவதில்லை. பூமியைச் சுற்றி இருக்கும் வளிமண்டலம் பாதுகாப்பு அரண் போல செயல்படுகிறது. பூமியை நோக்கி வேகமாக உள்ளே நுழையும் விண்கற்கள், காற்றோடு உராயும்போது, அதிகமான வெப்பம் உருவாகும். அதன் காரணமாக அவை முழுவதுமாக எரிந்துவிடும் அல்லது சிறுசிறு பகுதிகளாகத் தரையை வந்தடையும். சில சமயங்களில், சற்று பெரிய அளவிலான விண்கற்கள் தரையை வந்தடைவதுண்டு.

விண்கல்

இதுபோன்ற விண்கற்கள் அரிய பொருள்களாகவும், விலை மதிப்பில்லாததாகவும் கருதப்படுகின்றன. அப்படி நிலவில் இருந்து பூமியில் விழுந்த அரிய விண்கல் ஒன்று இந்திய மதிப்பில் நான்கு கோடி ரூபாய்க்கு ஏலம் போயிருக்கிறது. 'Buagaba' என்று பெயரிடப்பட்ட இதைக் கடந்த வாரம் வெள்ளியன்று அமெரிக்காவின் பாஸ்டனைச் சேர்ந்த RR Auction நிறுவனம் ஏலம் விட்டது. 5 கிலோ எடையும் ஆறு தனித்தனி பகுதிகளாகவும் இருக்கும் இதை ஒன்றிணைத்தால் முழுமையான விண்கல்லாகத் தோற்றமளிக்கிறது. இந்த விண்கல், கடந்த 2017-ம் ஆண்டில் வடமேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள மாரித்தானியா ( Mauritania) என்ற பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடந்த வருடம் கண்டுபிடிக்கப்பட்டிருந்தாலும்கூட, பல ஆயிரம் வருடங்களுக்கு முன்னால் பூமியில் விழுந்திருக்கலாம் என நம்பப்படுகிறது.