வெளியிடப்பட்ட நேரம்: 08:45 (23/10/2018)

கடைசி தொடர்பு:13:46 (23/10/2018)

`மலை உச்சியில் மலர்ந்த காதல்; கன நேரத்தில் க்ளிக் செய்த போட்டோகிராபர்’- இணையத்தை ஆக்கிரமித்த புகைப்படம்

காதல் ஜோடி

Photo Credit: https://www.facebook.com/matthew.dippel

இயற்கையின் ரம்மியமான சூழலில் மலை உச்சியில் காதலன் தன் காதலியின் முன்பு மண்டியிட்டு தனது காதலை வெளிப்படுத்துகிறான். அந்தப்பெண் ஒரு தேவதை போன்று நிற்கிறாள். சினிமா படங்களில் வரும் காதல் காட்சி போன்றுதான். லாங் ஷாட்டில் இந்தப் புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. அந்தப்பெண் காதலை ஒத்துக்கொண்டாள். அதன்பின் என்ன ஆனது எழுதப்படாத அந்த க்ளைமாக்ஸை ஒரு புகைப்படக்காரர் தேடிக்கொண்டிருக்கிறார். இந்தப் புகைப்படத்தை எடுத்தவருக்கு அந்த ஜோடி குறித்து எதுவும் தெரியாது. புகைப்படக்காரர் பெயர் மேத்யூவ் டிப்பில் (Matthew Dippel). அமெரிக்காவைச் சேர்ந்தவர். கலிபோர்னியாவில் உள்ள தேசியப் பூங்காவுக்குச் சென்றவர் தனது கேமராக்களின் வழியே இயற்கை அழகை க்ளிக் செய்துகொண்டிருந்தார். அப்போதுதான் அவரது கண்ணில் இந்தக்காட்சி தென்பட்டது. அதை மிக அழகாக படம் பிடித்த மேத்யூவ் அந்தக் காதல் ஜோடியைக் காண மலை உச்சிக்கு விரைந்துள்ளார். ஆனால், அங்கு அவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அக்டோபர் 6-ம் தேதி மேத்யூவ் இந்தப் புகைப்படத்தை எடுத்திருந்தார்.

இந்தப் புகைப்படம் மேத்யூவைத் தொடர்ந்து உறுத்திக்கொண்டே இருந்துள்ளது. அந்த ஜோடியைக் கண்டுபிடித்துவிட வேண்டும் என எண்ணிய மேத்யூ இணையதளத்தைக் கையில் எடுத்தார். அக்டோபர் 17-ம் தேதி இந்தப் புகைப்படத்தை தனது முகநூலில் பதிவிட்டார். அதில், `` இணையதளமே நான் உன்னுடைய உதவியை நாடுகிறேன். இந்தப் புகைப்படம் கலிபோர்னியாவில் உள்ள தேசியப் பூங்காவின் Taft Point-ல் எடுக்கப்பட்டது. அந்தக்காதல் ஜோடியைக் காண நான் ஆவலாக இருக்கிறேன்’ என குறிப்பிட்டிருந்தார். இந்தப் புகைப்படத்தை அவர் பதிவிட்டது தான் தாமதம் லைக், ஷேர்கள் அள்ளியது. மேலும் இந்தப்புகைப்படத்தை எடுத்ததற்காகப் பாராட்டுகளும் குவியத் தொடங்கியுள்ளது. சிலர் உங்கள் தேடுதல் வெற்றி பெற வாழ்த்துகள் எனப் பதிவிட்டுள்ளனர்.

இதுகுறித்து ஆங்கில செய்தி நிறுவனத்துக்குப் பேட்டி அளித்துள்ள மேத்யூ, ``இயற்கைக் காட்சிகளைப் படம் பிடிப்பதற்காக நான் காத்திருந்தேன். எனது கேமராவும் தயார் நிலையில் இருந்தது. அப்போது ஒரு ஜோடியை Taft Point-ல் கண்டேன். அவர்கள் தங்களது காதலை வெளிப்படுத்திக்கொண்டிருந்தனர். அந்த சூழலில் அது மிகவும் அற்புதமாக இருந்ததால் அந்தக்காட்சிகளை க்ளிக் செய்தேன். அதன் பின் அவர்கள் இருந்த இடத்தை நோக்கி விரைந்தேன். அதற்குள் அவர்கள் அங்கிருந்து புறப்பட்டுச் சென்று விட்டனர். மேலும், அங்கு ஏராளமான ஜோடிகள் இருந்ததால் என்னால் அவர்களைக் கண்டுபிடிக்க முடியவில்லை. அவர்களைக் கண்டுபிடிக்க வேண்டி கடந்த 17-ம் தேதி ஃபேஸ்புக்கில் பதிவிட்டேன்” எனத் தெரிவித்துள்ளார்.