வெளியிடப்பட்ட நேரம்: 09:00 (23/10/2018)

கடைசி தொடர்பு:09:23 (23/10/2018)

‘என் காலணிகளும் வேண்டும்’ - சிறுமியைக் காப்பாற்றிய டெலிவரி பாய்க்கு நேர்ந்த சோதனை

சீனாவில் உணவை டெலிவரி செய்யச் சென்ற நபர் தண்ணீரில் தத்தளித்த சிறுமியைக் காப்பாற்றும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகப் பரவி வருகிறது.

சீனா

சீனாவின் ஷாக்‌ஷிங் சிட்டி (Shaoxing City) பகுதியில் இந்த வீடியோ எடுக்கப்பட்டுள்ளது. ஆற்றங்கரையில் இரண்டு சிறுமிகள் அமர்ந்துகொண்டிருக்கின்றனர். அதில் ஒரு சிறுமி தண்ணீருக்கு அருகில் விளையாடிக்கொண்டிருக்கிறார். அப்போது தடுமாறி ஆற்று நீரில் விழுந்துவிடுகிறார். அப்பகுதியில் யாரும் இல்லாததால் சிறுமி ஆற்றில் விழுந்தது யாருக்கும் தெரியவில்லை. மற்றொரு சிறுமி நடப்பது என்னவென்று தெரியாமல் கரை மீது அமர்ந்திருக்கிறார். அப்போது அவ்வழியாக சென்ற டெலிவரி பாய் ஒருவர் தனது இரு சக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு தண்ணீரில் பாய்ந்து சிறுமியைக் காப்பாற்றி விட்டார். அதன்பின் நடந்தவை தான் சுவாரஸ்யம். அந்தச் சிறுமி தனது காலணிகள் தண்ணீரில் விழுந்துவிட்டது அதை எடுத்துத்தாருங்கள் எனக் கேட்க அந்த வாலிபர் மீண்டும் தண்ணீரில் சென்று காலணியை எடுத்து சிறுமியிடம் கொடுக்கிறார். இதை வாங்கிக்கொண்ட சிறுமி அங்கிருந்து சென்றுவிட்டார் சகஜமாக. இந்தக்காட்சிகள் அனைத்தும் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. 23 வயதான அந்த வாலிபர் He Linfeng என்பது தெரியவந்துள்ளது. அவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. வீடியோவும் சமூகவலைதளங்களில் ஹிட் அடித்து வருகிறது.