ஜமால் உடை; ஒட்டுத் தாடி - சவுதியின் சதியை அடுத்தடுத்து அம்பலப்படுத்தும் துருக்கி #JamalKhashoggi | A Saudi operative was wearing Jamal's clothes and a fake beard on the day of the murder

வெளியிடப்பட்ட நேரம்: 10:15 (23/10/2018)

கடைசி தொடர்பு:10:15 (23/10/2018)

ஜமால் உடை; ஒட்டுத் தாடி - சவுதியின் சதியை அடுத்தடுத்து அம்பலப்படுத்தும் துருக்கி #JamalKhashoggi

சவுதி தூதரகத்தில் ஜமால் கொல்லப்பட்ட பிறகு அவரின் உடைகளை சவுதியைச் சேர்ந்த ஒரு ஏஜென்ட் அணிந்து வருவது அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. 

ஜமால்

PhotoCredits : Twitter/@KenRoth

சில வாரங்களாக உலக சமூகவலைதளங்களில் சுற்றி வரும் ஒரு பெயர் ஜமால் கஷோகிஜி. ஜமால் கொல்லப்பட்ட விவகாரத்தில் பல அதிர்ச்சித் தகவல் தொடர்ந்து வெளிவந்த வண்ணம் உள்ளன. சவுதி அரசையும் இளவரசர் முகமது பின் சல்மானையும் தொடர்ந்து விமர்சித்து எழுதி வந்த பத்திரிகையாளர் ஜமாலை தீர்த்துக்கட்ட முடிவு செய்திருந்தது சவுதி அரசு. இதனிடையே தன் காதலியைத் திருமணம் செய்துகொள்ள ஜமால் துருக்கி சென்றிருந்தார். அப்போது இஸ்தான்புல் நகரில் உள்ள சவுதி தூதரத்துக்குள் சென்ற ஜமால் நீண்ட நேரமாகியும் வெளியே வரவில்லை. பத்திரிகையாளர் ஜமால் காணாமல் போன விஷயம் உலக நாடுகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

இஸ்தான்புல் நகரில் உள்ள சவுதி தூதரகத்தின் உள்ளேயே ஜமால் கொல்லப்பட்டுள்ளார். இவரைக் கொல்வதற்காக ரியாத்திலிருந்து 15 பேர் கொண்ட ஸ்பெஷல் டீம் இஸ்தான்புல்லுக்குச் சென்றுள்ளது என்பது போன்ற விஷயங்களைத் துருக்கி அரசு கண்டுபிடித்து வெளியிட்டது. முன்னதாக, `எங்களுக்குக் கிடைத்துள்ள ஆடியோ ஆதாரங்கள்படி ஜமால் சித்ரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். அருகில் இருந்த காட்டில் அவரது உடல் புதைக்கப்பட்டிருக்கலாம்’ என்று துருக்கி அரசு பத்திரிகையான யேனி சபாக் செய்தி வெளியிட்டது. 

இவற்றைத்தொடர்ந்து தற்போது இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. ஜமால் தொடர்பாக தங்களிடம் உள்ள ஆதாரங்கள் அனைத்தையும் ஒன்றன் பின் ஒன்றாக வெளியிட்டு வருகிறது துருக்கி. இந்த ஆதாரங்கள் அனைத்தும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் விதமாகவே உள்ளன. இதற்கு முன்னர் வெளியான தகவலின்படி, சவுதி மன்னரின் பாதுகாவலர்கள் அதாவது சவுதியைச் சேர்ந்த பாதுகாப்புப் படை வீரர்கள் மற்றும் உடற்கூறு ஆய்வு நிபுணர்கள் என 15 பேர் இணைந்து ஜமாலை கொலை செய்து அவரது உடலைப் பல பாகங்களாக வெட்டிக் காட்டு பகுதியில் வீசிச் சென்றுள்ளனர் என தெரிவிக்கப்பட்டது. 

இந்த நிலையில், தற்போது ஜமால் இஸ்தான்புல்லில் உள்ள சவுதி தூதரகத்துக்குச் சென்ற அன்றைய தினம், சவுதி கூலிப்படையைச் சேர்ந்த ஒருவர் ஜமால் அணிந்திருந்த உடையை அணிந்தபடி தூதரகத்தில் இருந்து வெளியேறும் காட்சிகள் வெளியாகியுள்ளன. இது குறித்து துருக்கி அதிகாரிகள் கூறும்போது, ``ஜமாலின் மரணத்தில் தொடர்புடைய சவுதியைச் சேர்ந்த 15 பேரில் ஒருவர் ஜமால் காணாமல் போன அன்றைய தினம் அவரின் உடையணிந்தபடி சவுதி தூதரகத்தின் பின் வாயில் வழியாக வெளியேறும் காட்சிகள் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளன. மேலும், அவர் ஜமாலைப் போன்ற தோற்றம் பெற வேண்டும் என்பதற்காக அவரைப் போன்று போலியான தாடியையும் தன் முகத்தில் ஒட்டிக்கொண்டு சென்றுள்ளார்” எனத் தெரிவித்துள்ளனர். 

‘ஜமாலின் ஆடையை அணிந்திருந்தவர் பெயர் முஸ்தஃபா அல் மதானி (Mustafa al-Madani). அவர் சவுதி அரசால் அனுப்பப்பட்ட 15 பேரில் ஒருவர்’ என துருக்கி அதிகாரி ஒருவர் சி.என்.என் ஊடகத்துக்குத் தகவல் தெரிவித்துள்ளார். மேலும் ‘அவர்கள் இரட்டை வேடமணிய வேண்டும் என்ற அவசியமில்லை. அக்டோபர் 6-ம் தேதி முதல் எங்களின் நிலைப்பாடு மாறவில்லை. இது திட்டமிட்டு செய்யப்பட்ட கொலை’ என்றும் கூறியுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக தீவிர விசாரணை நடத்த வேண்டும் என துருக்கி அதிபர் ரிசப் யிப் எர்டோகன் (Recep Tayyip Erdogan) அந்நாட்டு உளவுத்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளார். இவர்களின் விசாரணையில் சவுதி பற்றிய மேலும் பல அதிர்ச்சிகர விஷயங்கள் வெளிவரும் எனவும் கூறப்படுகிறது.