இரண்டு பாட்டில் தண்ணீருக்கு ஏழரை லட்சம் டிப்ஸ்! - இன்ப அதிர்ச்சியில் துள்ளிக்குதித்த வெயிட்டர் | A waiter recieves Rs.10,000 rupees as tip

வெளியிடப்பட்ட நேரம்: 12:55 (23/10/2018)

கடைசி தொடர்பு:12:55 (23/10/2018)

இரண்டு பாட்டில் தண்ணீருக்கு ஏழரை லட்சம் டிப்ஸ்! - இன்ப அதிர்ச்சியில் துள்ளிக்குதித்த வெயிட்டர்

அமெரிக்காவில் நார்த் கரோலினா மாகாணத்தில் உணவகம் ஒன்றில் வெயிட்டராக பணியாற்றி வரும் அலைனா கஸ்டர் என்ற பெண்ணுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளார் தண்ணீர் குடிக்க வந்த ஒருவர்.

அந்த உணவகத்துக்கு வந்த ஒரு நபர், இரண்டு பாட்டில் தண்ணீர் ஆர்டர் செய்திருக்கிறார். தண்ணீரை அருந்திவிட்டு அவர் சென்றதும், அவர் விட்டுச் சென்ற டிப்ஸைப் பார்த்த அலைனாவால் நம்ப முடியவில்லை. அவர் விட்டுச் சென்றது 10,000 டாலர். இந்திய மதிப்பில் ஏறத்தாழ ஏழரை லட்சம் ரூபாய். அதோடு, மிகச் சுவையான தண்ணீருக்கு நன்றி என்ற குறிப்பும் இருந்திருக்கிறது. அப்படி தாராளமாக டிப்ஸை வழங்கியவர் Mr.beast என்ற ஒரு பிரபல யூடியூப்  சேனலின் உரிமையாளரும், நிகழ்ச்சி தயாரிப்பாளரும் எனத் தெரிய வந்திருக்கிறது.

ஏழரை லட்சம்

தன்னுடைய நிகழ்ச்சிக்காக அவர் இந்த விளையாட்டை நிகழ்த்தி இருக்கிறார். அலைனா இந்தப் பணத்தைப் பார்த்ததும் எப்படி நடந்து கொள்கிறார் என்று அனைத்தையும் படம் பிடித்திருக்கிறார்கள் அவரது குழுவினர். முதலில் நம்ப முடியாமல், என்ன நடக்கிறது என விழித்த அவர், பின்னர் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்திருக்கிறார். விஷயம் அறிந்ததும் நிகழ்ச்சி சம்பந்தப்பட்டவர்களைக் கட்டி அணைத்து நன்றி தெரிவித்திருக்கிறார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ``இங்கு பணிபுரிபவர்கள் எல்லோருமே மிகவும் கஷ்டப்படக் கூடிய கல்லூரி மாணவர்கள்தான். இந்தப் பணம் எங்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும். நான் என் நண்பர்களோடு இதைப் பகிர்ந்துகொள்வேன்'' என்று தெரிவித்திருக்கிறார். இதற்கு முன்னரே இவர் இப்படி ஒரு வீடில்லாத மனிதனுக்கு இவ்வாறு பணத்தை வழங்கி அது தொடர்பான காட்சிகளை இணையத்தில் பதிவேற்றி இருக்கிறார். 

Source : Fox News