தந்தூரி கோழி போல புதிய உயிரினம்! - அண்டார்டிகா ஆச்சர்யம் | Headless Chicken Monster’ Spotted in deep of Southern Ocean

வெளியிடப்பட்ட நேரம்: 13:40 (23/10/2018)

கடைசி தொடர்பு:13:40 (23/10/2018)

தந்தூரி கோழி போல புதிய உயிரினம்! - அண்டார்டிகா ஆச்சர்யம்

தலையில்லாத உரித்த கோழியின் தந்தூரி போன்று அடர் சிவப்பும் மெல்லிய உடலுமாக அந்த அரிய கடல்வாழ் உயிரினம் காணப்படுகிறது.

கடல் உயிரினம்

தலையில்லாத கோழியைப் போன்ற உருவத்தை உடைய புதிய கடல் உயிரினத்தை அறிவியல் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். அந்த உயிரினத்தின் உருவத்தை வைத்து தலையில்லாத கோழி (headless chicken monster) என்றே அழைக்கவும் செய்கின்றனர். மேலும், இதற்கு ஸ்பானிஷ் டேன்சர் (The Spanish Dancer) என்ற மற்றொரு பெயரும் இருக்கிறது. அன்டார்டிகாவுக்கு அருகில் உள்ள தெற்குப் பெருங்கடலின் (Southern Ocean) கிழக்குப் பகுதியில் ஆஸ்திரேலியாவுக்கு அருகில் உள்ள ஆழ்கடலில் இந்த அரிய உயிரினம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய அன்டார்டிகா பிரிவின் ஆழ்கடலில் நீண்டகால மீன்பிடித் தாக்கங்களைக் கண்காணிக்க புதிய தொழில்நுட்பத்தைக் கொண்ட கேமராக்களை ஆழ்கடலுக்குள் அனுப்பியுள்ளனர். அந்தக் கேமராக்களில்தான் இந்தத் தலையில்லாத கோழி சிக்கியுள்ளது. இதற்கு முன்பு கடந்த வருடம் மெக்சிகோ வளைகுடா (Gulf of Mexico) பகுதியில் இந்த உயிரினம் தென்பட்டது. அதன்பிறகு இப்போதுதான் ஆழ்கடலில் தென்பட்டுள்ளது. 

 

 

ஆழ்கடலில் பரவலாகக் காணப்படும் சீ குக்கும்பர் (Sea Cucumber) உயிரினத்தின் குடும்பத்தைச் சேர்ந்தவைதான் இந்தக் கடல் தலையில்லா கோழி. அடர் சிவப்பு நிறத்தில் தலையில்லாத கோழியைப் போலக் காணப்படும் இவற்றுக்கு மென்மையான உடலும் சிறகு போன்ற அமைப்பும் காணப்படுகின்றன. அதனால் இவை நீந்தக்கூடியத் திறனைப் பெற்றிருக்கின்றன. ஆஸ்திரேலிய அண்டார்டிகா பிரிவின் கடல்பகுதியானது அதிகமான கடல்வாழ் உயிரிகளைக் கொண்டது. எனவே, மீன்களுக்குப் பதில் இந்த அரிய உயிரினங்களைப் பிடிப்பதை தவிர்ப்பதற்காகத்தான் கேமரா மூலம் கண்காணிக்கின்றனர். தெற்கு பெருங்கடலின் 9,800 அடி ஆழத்தில்தான் தலையில்லாத கோழி கேமராவில் மாட்டியுள்ளது. தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தொடர்ந்து இந்த அரியவகை உயிரினம் குறித்தான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.