அமீர் கான் படத்தைப் பார்க்க இந்தியா வரும் சீன ரசிகர்கள்! | fans from china fly down to india to watch this movie

வெளியிடப்பட்ட நேரம்: 22:30 (23/10/2018)

கடைசி தொடர்பு:22:30 (23/10/2018)

அமீர் கான் படத்தைப் பார்க்க இந்தியா வரும் சீன ரசிகர்கள்!

இந்தியப் படங்களுக்கு உலகம் முழுவதும் மார்கெட் வளர்ந்துவருகிறது. பல நடிகர்களுக்கு இந்தியாவில் இருப்பதுபோலவே தீவிர ரசிகர்கள் பட்டாளம் உலகெங்கிலும் உள்ளது. ஜப்பானில் பல ரஜினி ரசிகர்கள் உள்ளனர் . அதுபோல, சீனாவில் இப்போது பெருமளவு ரசிகர்களைச் சேர்த்து வைத்திருப்பவர், ஹிந்தி நடிகர் அமீர் கான். சீனாவில், மிகப் பிரபலமான சர்வதேச நடிகர் இவர்தான் என்கிறார்கள். அங்கு இவரை, அங்கிள் கான் என்று அன்பாக அழைக்கிறார்கள்.

அமீர்கான் நடிக்கும் படம்

இவர், 2016 ல்  நடித்த `டங்கல்’ திரைப்படம், சீனாவில் ஏறத்தாழ 1500  கோடி ரூபாய் வசூலித்தது, அதேபோல 2017ல்,  சீக்ரெட் சூப்பர் ஸ்டார் திரைப்படம் 800  கோடி ரூபாய் சம்பாதித்தது. அதற்கு முன்னர் வெளியான PK  திரைப்படமும் பெரும் வரவேற்பைப் பெற்றது.
இந்நிலையில், அமீர் கான் மற்றும் அமிதாப் பச்சன்  நடிப்பில் வெளிவர இருக்கும் `தக்ஸ் ஆஃப் ஹிந்துஸ்தான்' (Thugs of Hindustan ) திரைப்படம் இந்த ஆண்டு வெளிவர இருக்கிறது. வழக்கமாக, இந்தியாவில்  வெளியாகி பல நாள்கள் கழித்தே சீனாவில் வெளியாகும். 

ஆகவேதான், சீனாவில் இருந்து அவரது ரசிகர்கள் இந்தியாவுக்கு அவரின் படத்தைப் பார்ப்பதற்காகவே வருகிறார்கள் என்ற தகவல் வெளியாகியிருக்கிறது. சமீபத்தில், சீன நாட்டு ஊடகத் துறை உயர் அதிகாரிகளைச் சந்தித்து, சுமுகமாக இணைத்து பணியாற்றுவது குறித்து அமீர்கான் விவாதித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.