வெளியிடப்பட்ட நேரம்: 06:10 (25/10/2018)

கடைசி தொடர்பு:08:11 (25/10/2018)

5 ஆயிரம் கோடியில் ஏவுகணைத் தடுப்பு அமைப்பு - இஸ்ரேலுடன் இந்தியா ஒப்பந்தம்

ஏவுகணை

இந்தியா, சமீப காலமாக ராணுவத்தைப் பலப்படுத்தும் முயற்சியைத் தீவிரப்படுத்தியுள்ளது. வெளிநாடுகளில் இருந்து ஆயுதங்களை வாங்குவதற்காகப் பல்வேறு  ஒப்பந்தங்கள் போடப்பட்டுவருகின்றன. சமீபத்தில்கூட ரஷ்யாவிடம் இருந்து S-400 ட்ரையம்ப் என்ற அதிநவீன வான் பாதுகாப்பு அமைப்பை வாங்க முடிவுசெய்யப்பட்டிருக்கிறது. அதைப்போல, தற்போது இஸ்ரேலிடம் இருந்தும் ஏவுகணைத் தடுப்பு அமைப்பை வாங்குவதற்கு இந்தியா முடிவுசெய்திருக்கிறது. அதன்படி, பாரக்  8 LR-SAM வகை ஏவுகணைத் தடுப்பு அமைப்பை இந்தியாவுக்கு இஸ்ரேல் அளிக்கும். அதற்காக, சுமார் 5ஆயிரம் கோடியில் ஒப்பந்தம் போடப்பட்டிருக்கிறது.  இது தொடர்பான தகவலை இஸ்ரேல் நாட்டில் வெளியாகும் 'க்ளோப்' என்ற நாளிதழ் வெளியிட்டுள்ளது. இந்தப் பாதுகாப்பு அமைப்புகள் கடற்படையில் உள்ள ஏழு கப்பல்களில் பொருத்தப்படும். இந்தியா மற்றும் இஸ்ரேல் ஆகிய இரண்டு நாடுகளின் கூட்டு முயற்சியில் இந்த  அமைப்பு உருவாக்கப்படும்.  குறிப்பாக, பாரத் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் பங்கு இதில் முதன்மையானதாக இருக்கும் என்று இஸ்ரேல் அரசுக்குச் சொந்தமான இஸ்ரேல் ஏரோஸ்பேஸ் இண்டஸ்ட்ரீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.