வெளியிடப்பட்ட நேரம்: 10:00 (25/10/2018)

கடைசி தொடர்பு:10:00 (25/10/2018)

``அரசியல் வன்முறைகளுக்கு இடமில்லை’’ வெடிகுண்டு பார்சல் விவகாரத்தில் ட்ரம்ப் காட்டம்!

அமெரிக்காவில் உள்ள பல்வேறு அரசியல் தலைவர்களுக்கு வெடிகுண்டு பார்சல் அனுப்பப்பட்ட விவகாரத்துக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். 

ட்ரம்ப்

அமெரிக்க முன்னாள் அதிபர் பில் கிளின்டன், அவரின் மனைவி ஹிலாரி கிளின்டனுடன் நியூயார்க் வடக்குப் பகுதியில் உள்ள சாபாக் என்ற இடத்தில் வசித்துவருகிறார். அவரது வீட்டில் நேற்று மதியம் வெடிகுண்டு கைப்பற்றப்பட்டுள்ளதாக எஃப்பிஐ தெரிவித்தது. அதேபோல, முன்னாள் அதிபர் பராக் ஒபாமா வீட்டிலும் வெடிகுண்டு பார்சல்களை எஃப்பிஐ கைப்பற்றியுள்ளது. இந்தச் சம்பவம் அமெரிக்காவில் பெரும் பதற்றத்தை உருவாக்கியது. இந்தச் சம்பவத்துக்கு வெள்ளை மாளிகையும் கடும் கண்டனத்தைப் பதிவு செய்திருந்தது. மேலும், பல தலைவர்களுக்கு இதுபோன்ற பார்சல்கள் அனுப்பட்டது பின்னர் தெரியவந்தது. அமெரிக்காவின் சி.என்.என் அலுவலகத்துக்கு வெளியேயும் அதுபோன்ற பார்சல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 

இந்நிலையில், இந்தச் சம்பவம் தொடர்பாக வெள்ளை மாளிகையில் பேசிய அமெரிக்க அதிபர் ட்ரம்ப்,  ``இந்தச் சம்பவத்தை நான் கடுமையாகக் கண்டிக்கிறேன். இந்த இக்கட்டான நேரத்தில், நாம் அனைவரும் ஒற்றுமையாக இணைந்து, இந்த உலகுக்கு உறுதியான ஒரு செய்தியைச் சொல்ல வேண்டும். அமெரிக்காவில் அரசியல் வன்முறைகளுக்கு இடமில்லை என்ற செய்திதான் அது. நமது அரசு, இந்த விவகாரத்தில் முழுக் கவனம் செலுத்தி, இந்த வெறுக்கத்தக்க செயலைச் செய்தவர்கள் குறித்து முழுமையான விசாரணை மேற்கொள்ளும். அமெரிக்க மக்களின் பாதுகாப்புதான் எல்லாவற்றுக்கும் முதன்மையானது” என்றார். 

அதேபோன்று, இந்த விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அமெரிக்காவின் முதல் பெண்மணி மெலனியா ட்ரம்ப்,  ``இதுபோன்ற தாக்குதலை ஒருபோதும் பொறுத்துக்கொள்ள முடியாது. வன்முறையைக் கையில் எடுப்பவர்களுக்குக் கண்டனங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என்றார்.