வெளியிடப்பட்ட நேரம்: 13:40 (25/10/2018)

கடைசி தொடர்பு:13:40 (25/10/2018)

` சாத்தானிடம் போகணும்' - பள்ளிக் கழிவறையில் கத்தியுடன் இரு மாணவிகள்!

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில், பர்ட்டோவ் மிடில் பள்ளியில் படிக்கும் இரண்டு சிறுமிகள், சக மாணவர்களைக் கொலை செய்யத் திட்டமிட்டு, பள்ளிக்கு கத்தியோடு வந்ததால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.11 மட்டும் 12  வயதுடைய அந்த இரண்டு சிறுமிகளும், வகுப்பறையில் இல்லாததை அறிந்து, பள்ளி நிர்வாகிகள் அவர்களைத் தேடியிருக்கிறார்கள். அப்போது, பள்ளிக் கழிவறையில்  அவர்கள் மறைந்திருப்பதை அறிந்து, அவர்களை அழைத்து பள்ளி அலுவலகத்தில் விசாரித்திருக்கின்றனர்.அப்போது அவர்களிடம் நான்கு கத்திகள், ஒரு பீசா வெட்டும் கத்தி, கத்தியைக் கூர்மையாக்கும் கருவி ஆகியவை இருப்பதை அறிந்து அதிர்ச்சியானவர்கள், இதுகுறித்து போலீஸில் புகார் கொடுத்திருக்கின்றனர்.

மாணவிகள் வைத்திருந்த கத்திகள்

PC: WPTV

இதையடுத்து, அவர்களைக் கைதுசெய்த போலீஸார், அவர்களிடம் விசாரணை நடத்தினர். அதில், மாணவிகள் இருவரும் அவர்களை விடச் சிறியவர்கள் கழிவறைக்குள் வந்தால், அவர்களின் கழுத்தை அறுத்து, ரத்தத்தைக் குடித்து, அவர்கள் சதையை அறுத்து உண்ணத் திட்டமிட்டிருக்கிறார்கள். குறைந்தது ஒருவரையாவது கொள்ள வேண்டும் எனவும், முடிந்தால் 15 பேரையாவது அப்படிக் கொன்றுவிட்டு, பின்னர் அவர்களும் கத்தியால் தங்களை குத்திக்கொண்டு தற்கொலை செய்துகொள்ள வேண்டும் என்றும் திட்டமிட்டிருக்கிறார்கள். இவ்வாறு செய்தால், நிறையப் பாவங்கள் சேர்ந்து, மரணித்ததும் நரகத்துக்குச் சென்று சாத்தானின் அருகிலேயே இருக்க முடியும் என நினைத்ததால், இவ்வாறு செய்ததாக அவர்கள் கூறியது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.

வார இறுதியில், இருவரும் பேய் படங்கள் பார்த்து இந்த யோசனை செய்ததாகவும் அந்தச் சிறுமிகள் கூறியிருக்கிறார்கள். சிறுமிகளால் யாரும் தாக்கப்படவில்லை என்றாலும், கொலைக்குத் திட்டமிட்ட குற்றத்திற்காக இருவரும் கைதுசெய்யப்பட்டு சிறுவர் சிறைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். இந்தச் சிறுமிகள் இருவர் மீதான விசாரணை மற்றும் வழக்கு தொடர்வது, அவர்களைக் குழந்தைகளாகக் கருதி நிகழ்த்தப்படுமா அல்லது பெரியவர்களாகக் கருதி வழக்கு தொடரப்படுமா என்பது இனிதான் முடிவுசெய்யப்படும் என்று போலீஸ் தரப்பு கூறியிருக்கிறது. மேலும், பள்ளியில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டிருப்பதாகவும், அனைத்து மாணவர்களுக்கும் உளவியல் வகுப்புகள் எடுக்கத் திட்டமிட்டிருப்பதாகவும் பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது.