சிறுநீரில் உருவாக்கப்பட்ட கட்டடக் கற்கள் - தென் ஆப்பிரிக்காவில் கண்டுபிடிப்பு! | south african students invent bio- bricks made from urine

வெளியிடப்பட்ட நேரம்: 06:30 (26/10/2018)

கடைசி தொடர்பு:06:30 (26/10/2018)

சிறுநீரில் உருவாக்கப்பட்ட கட்டடக் கற்கள் - தென் ஆப்பிரிக்காவில் கண்டுபிடிப்பு!

உலகம் வேகமாக வளர்ந்து வரும் நிலையில், மக்கள் பயன்பாட்டுக்காக, கோடிக்கணக்கான கட்டடங்கள் தினம் கட்டப்பட்டுக்கொண்டே இருக்கின்றன. அதற்கான கட்டுமானப் பொருள்களின் விலை தினம் தினம் அதிகரித்துக்கொண்டேதான் வருகிறது. இயற்கையை அழித்து, இந்தியாவில் மணல் கொள்ளையடித்துக் கொண்டிருக்கும் வேளையில், இயற்கையைப் பாதுகாக்க கழிவிலிருந்து ஒரு பொருளை தயாரிக்கும் ஆராய்ச்சியில் ஈடுபட்டார்கள் தென் ஆப்பிரிக்காவின் கேப் டவுன் மாணவர்கள். இவர்கள் மனிதக் கழிவான சிறுநீரில் இருந்து, செங்கற்களுக்கு மாற்றாகக் கட்டடக் கற்கள் தயாரித்திருக்கிறார்கள். மனித சிறுநீருடன், மணல் மற்றும் சில பாக்டீரியாக்களைச் சேர்த்து, நுண்ணுயிர் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இந்த அதிசயத்தை நிகழ்த்தி உள்ளார்கள்.

கட்டிட

சிறுநீர், அதனுடன் மணல் மற்றும் பாக்டீரியா சேர்க்கும்பொழுது, பாக்டீரியா மணலில் இருக்கும் யூரேஸ் எனும் வேதியல் பொருளை வெளிகொண்டுவருகிறது. இந்த யூரேஸ், சிறுநீரில் இருக்கும் யூரியாவுடன் வினைபுரிந்து கால்சியம் கார்போனைட்டை உருவாக்குகிறது. இது மணலை இருக்கச் செய்து கல்லாக மாற்றுகிறது. இதனால் வழக்கமாக செங்கல் தயாரிப்பில் பயன்படுத்தும் அதீத வெப்பமும், அதனால் வெளிவிடப்படும் கரியமில வாயுவும் குறையும் என்கின்றனர்.

இந்தச் சாதனையைக் கேப் டவுன் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி மாணவரான சுசேன் லேம்பெர்ட் தன் நண்பர்களோடு சேர்ந்து நிகழ்த்தியுள்ளார். விரைவில் இந்தக் கட்டடக்கல் தயாரிப்பு முறை வெகுஜன பயன்பாட்டுக்கு வரவும் வாய்ப்பிருப்பதாக அந்தப் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். அப்படி நிகழும்போது, சிறுநீர் ஒரு திரவ தங்கமாகக் கருதப்படும் என்கிறார். ஆனால், நாம் வசிக்கும் வீடுகளில், சுவர்களில், கற்களில் சிறுநீரா என்ற உளவியல் சங்கடத்தை மறக்க, மக்கள் மனதை பழக்கப்படுத்திக்கொள்ள வேண்டியிருக்கும்.