கூகுளிலும் #MeToo! -ஊழியர்களுக்குக் கடிதம் எழுதிய சுந்தர் பிச்சை | Google CEO sundar pichai sends email to his co workers regarding sexual harassment

வெளியிடப்பட்ட நேரம்: 09:10 (26/10/2018)

கடைசி தொடர்பு:09:18 (26/10/2018)

கூகுளிலும் #MeToo! -ஊழியர்களுக்குக் கடிதம் எழுதிய சுந்தர் பிச்சை

கூகுள் நிறுவனம், பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட தனது நிர்வாகிகளைப் பாதுகாப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில் சுந்தர் பிச்சை, தனது ஊழியர்களுக்குக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.  

சுந்தர் பிச்சை

உலகம் முழுவதும் பணியிடங்களில் பெண்கள் சந்திக்கும் பாலியல் ரீதியிலான இன்னல்களை வெளிப்படையாகப்  பேசிவருகின்றனர். உலக அளவில் தொடங்கப்பட்ட  # Metoo இயக்கம், சமீபத்தில் இந்தியாவிலும் பெரும் புயலைக்  கிளப்பியது. திரைப் பிரபலங்கள், அரசியல்வாதிகள் எனப்  பலர்மீது குற்றச்சாட்டுகள்  வெளிவந்தன. இதன்மூலம், சிலர் தங்களது பதவிகளையும்  இழந்தனர். இதுபோன்று பாலியல் ரீதியிலான  துன்புறுத்தலுக்கு ஆளாகும் பெண்கள், அதை வெளிப்படையாகப்  பேசுவதற்கு வரவேற்பும்  கிடைத்துள்ளது. எனினும் இதுபோன்ற குற்றச்சாட்டுகள்,  அடிப்படை ஆதாரம்  அற்றவை  என்று சிலர் குற்றம் சாட்டவும் செய்கின்றனர். 

இந்நிலையில், தொழில்நுட்பத்தில் உலகின் முன்னணி நிறுவனமாக விளங்கும் கூகுளையும் இந்தப்  புகார்கள் விட்டுவைக்கவில்லை. அமெரிக்காவின் நியூயார்க் டைம்ஸ் வெளியிட்டுள்ள ஒரு கட்டுரையில், கூகுள் நிறுவனம் பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு  ஆளான அதன் முக்கிய நிர்வாகிகளைப்  பாதுகாப்பதாகவும், அவர்களுக்கு அதிக அளவில் பணம் வழங்கப்பட்டு, பின்னர் நிறுவனத்தில் இருந்து அனுப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளது. இதில், ஆண்ட்ராய்டை உருவாக்கிய ஆன்டி ரூபனும் ஒருவர் என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இந்தச்  செய்தி உலகம் முழுவதும் பெரும் பரபரப்பையும்,  விவாதத்தையும் கிளப்பிய நிலையில், கூகுள்  நிறுவனத்தின் சி.இ.ஓ சுந்தர் பிச்சை, தனது ஊழியர்களுக்கு இ-மெயில் ஒன்றை அனுப்பினார். அதில் அவர், கூகுள்  நிறுவனத்தில் பாலியல் துன்புறுத்தல் சம்பவங்கள் நடைபெற்றதாகவும், அதற்காகக்  கடந்த   இரண்டுஆண்டுகளில்  48 ஊழியர்கள் பணியில் இருந்து நீக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். 

சுந்தர் பிச்சை தனது இ-மெயிலில்,  ``அனைவருக்கும் வணக்கம். இன்று ((நேற்று )25-10-2018) நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையில் வெளியான கட்டுரையைப் படிக்கக்  கடினமாக இருந்தது. நாங்கள், இங்கு  பாதுகாப்பான பணியிடத்தை உருவாக்க உறுதிகொண்டுள்ளோம். பாலியல் துன்புறுத்தல்கள் அல்லது மோசமான நடத்தைகுறித்து வரும் ஒவ்வொரு புகாரும் விசாரிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 

அதிகாரத்தில் இருப்பவர்களின் மோசமான நடத்தையைத்  தடுப்பதற்காகக் கடந்த சில ஆண்டுகளாக இங்கு பல்வேறு மாற்றங்களைச்  செய்துவருகிறோம். கடந்த இரு ஆண்டுகளில், பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டு  காரணமாக  48 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அவர்களில்  13 பேர் சீனியர் மேனேஜர் மற்றும் அதற்கு மேலான பதவிகளில் இருந்தவர்கள். இவர்களில் ஒருவருக்குக்கூட  பணியில் இருந்து செல்லும்போது வழங்கப்படும் தொகை எதுவும் வழங்கப்படவில்லை.

கூகுள் நிறுவனத்தில் நடைபெறும் உள் விசாரணைகள்  வெளிப்படைத் தன்மை கொண்டதாகத்தான் இருக்கும். அதே நேரத்தில், பாலியல் ரீதியிலான புகார்களைத் தெரிவிப்பது என்பது எத்தனை அதிர்ச்சிகரமானது என்பதையும் அறிவோம். நீங்கள் சந்தித்த அல்லது சந்திக்கும் மோசமான நடத்தைகளைப்  பாதுகாப்பான முறையில் எங்களுக்குத்  தெரிவிக்கலாம். இதுபோன்ற புகார்களைத்  தெரிவிக்கும் நபர்களை நாங்கள் ஆதரிக்கிறோம், மதிக்கிறோம். நீங்கள் விரும்பினால், உங்களின் அடையாளத்தைத் தெரிவிக்காமல்கூட புகார் தரலாம்.

அனைத்து  துணைத் தலைவர்களும், சிறப்பு துணைத் தலைவர்களும், பணியாளர்களுடன் இருக்கும் அன்றாட அலுவல் முறை சார்ந்த மற்றும் சாரா தொடர்புகள் அனைத்தையும் தெரிவிக்கும்படி புதிய விதிகள் உருவாக்கப்பட்டுள்ளன. நிறுவனத்தில் தவறாக நடப்பவர்கள் நிச்சயம் மோசமான விளைவுகளைச்  சந்திப்பார்கள். கூகுள் பாதுகாப்பான பணியிடமாக இருக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது“ என்று குறிப்பிட்டுள்ளார். 

இந்தக்  கடிதத்தில், கூகுளின் துணைத் தலைவரான எய்லீனும் கையெழுத்திட்டுள்ளார். இந்தக்  கடிதத்தின்மூலம் கூகுள் நிறுவனத்தில் பாலியல் துன்புறுத்தல்கள் இருப்பது தெரியவந்தாலும், கூகுள் நிறுவனம் இதை ஆதரிக்கவில்லை என சுந்தர் பிச்சை உடனடி விளக்கம் அளித்ததைப்  பலர் பாராட்டியுள்ளனர்.