வெளியிடப்பட்ட நேரம்: 14:00 (26/10/2018)

கடைசி தொடர்பு:14:00 (26/10/2018)

``மூக்கு வழியாக மூச்சு விட்டால் தாக்குவார்கள்!'' - ஜப்பான் பத்திரிகையாளர் சந்தித்த கொடூரம்

வுதி அரேபியாவைச் சேர்ந்த பத்திரிகையாளர் ஜமால் கஷோகி கொல்லப்பட்ட வடு ஆறுவதற்குள் இன்னொரு பத்திரிகையாளருக்கு நேர்ந்த கொடூர அனுபவம் மீடியா உலகத்தை உலுக்கியுள்ளது. 

ஜப்பான்

3 வருடங்களுக்கு முன் ஜப்பானியப் பத்திரிகையாளர் ஜம்பே யசுடாவை அல்குவைதாவின் சிரியா பிரிவு தீவிரவாதிகள் உளவுப் பார்ப்பதாகக் கூறி கடத்திச் சென்று தங்களிடம் பிணைக்கைதியாக வைத்திருந்தனர். சுமார் 40 மாதங்கள் சிரியாவில் பிணைக்கைதியாக வைக்கப்பட்டிருந்த யசோடா அக்டோபர் 23- ந் தேதி விடுவிக்கப்பட்டார். அலங்கோலமான நிலையில் நேற்று டோக்கியோ திரும்பிய அவர் தான் அனுபவித்த கொடுமைகளை விவரித்துள்ளார்.

``சிரியாவின் மேற்குப் பகுதியில் உள்ள இட்லிப் என்ற இடத்தில்தான் என்னை அடைத்து வைத்திருந்தனர் என்று நினைக்கிறேன். என்னைப் பிடித்துச் சென்ற 8 மாதங்கள் ஒன்றரை மீட்டர் உயரமும் ஒரு மீட்டர் அகலமும் கொண்ட அறையில் தங்க வைத்தனர். உடை மாற்றக் கூடாது. குளிக்கக் கூடாது. நான் இருந்த இடத்திலிருந்து எந்தச் சத்தமும் வெளியே கேட்கக் கூடாது. நாள் கணக்கில் குளிக்காததால் என் தலையில் நமைச்சல் எடுக்கும். நான் சொறிந்தால் கூட சத்தம் கேட்கும் என்பதால் அது கூட செய்ய முடியாது. மூக்கு வழியாக மூச்சு விடக் கூடாது. வாய் வழியாகவே மூச்சு விட வேண்டும். உறங்கும் போது உருளக் கூடாது. விரல்களுக்குச் சொடுக்கு விடக் கூடாது. கேனில் அடைக்கப்பட்ட உணவு என் முன்னால் வைப்பார்கள். ஆனால், அதை நான் உடைத்துச் சாப்பிடக் கூடாது.

எந்தச் சத்தம் கேட்டாலும் தாக்குவார்கள். அதனால், 20 நாள்கள் வரை கூட சாப்பிடாமல் இருந்துள்ளேன். ஒரு கட்டத்தில் என்னை அந்த இடத்திலிருந்து வேறு இடத்துக்கு மாற்றினார்கள். அதற்குப் பிறகே எனக்கு உயிர் வந்தது. விடுதலைக்கு ஒரு வாரத்துக்கு முன் மீண்டும் நான் தாங்க முடியாத துயரம் அனுபவித்த பழைய இடத்துக்குக் கொண்டு போய் அடைத்தனர். பின்னர், என்ன நினைத்தார்களோ தெரியவில்லை என்னை காரில் ஏற்றிக் கொண்டு வந்து துருக்கி எல்லையில் விட்டுச் சென்றனர். நான் உயிர் பிழைப்பேன் என்ற நம்பிக்கை எனக்குள் இல்லை. தற்போது, தாய்நாட்டுக்குத் திரும்பியது மகிழ்ச்சியளிக்கிறது'' என்று தெரிவித்துள்ளார்.

டோக்கியோவில் ஜம்பே யசுடாவுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அனுபவித்த கொடுமைகளால் மனதளவில் அவர் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளார். மத்திய கிழக்கு நாடுகளில் ஃப்ரீலான்ஸ் பத்திரிகையாளராகப் பணியாற்றி வந்த ஜம்பே யசுடா 2015- ம் ஆண்டு மாயமானார்.. 2016- ம் ஆண்டு மார்ச் 17-ந் தேதி யசுடா பேசிய வீடியோ ஒன்று வெளியானது. அவ்வப்போது ஜம்பே யசுடாவின் வீடியோக்களைத் தீவிரவாதிகள் வெளியிட்டு வந்தனர். இவரை மீட்க உதவி புரிந்த கத்தார் மற்றும் துருக்கி நாடுகளுக்கு ஜப்பான் அரசு நன்றி தெரிவித்துள்ளது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க