வெளியிடப்பட்ட நேரம்: 19:30 (26/10/2018)

கடைசி தொடர்பு:19:30 (26/10/2018)

மூன்று வேளைக்கும் கொக்க கோலாதான் உணவு - பிஞ்சுக் குழந்தைகளுக்குத் தந்தையால் நேர்ந்த சோகம்!

பிரான்ஸில் பல நாள்களாகத் தன் பிள்ளைகளுக்கு உணவுகள் கொடுக்காமல் வெறும் கொக்க கோலா மற்றும் கேக் கொடுத்த தந்தையை போலீஸார் கைது செய்துள்ளனர்.

photo credit : @CocaCola_Ind

பிரான்ஸ் நாட்டின் லிமோகெஸ் நீதிமன்றத்தில் சமீபத்தில் வழக்கு ஒன்று விசாரணைக்கு வந்தது. லிமோகெஸ் பகுதியைச் சேர்ந்த தந்தை ஒருவர் தன் 3 மற்றும் 4 வயதுடைய இரண்டு குழந்தைகள் மற்றும் மனைவிக்கு உணவு கொடுக்காமல் கொடுமைப்படுத்தியுள்ளார் என்பது தான் அந்த வழக்கு. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிக்கு அந்தத் தந்தையின் செயல் மேலும் அதிர்ச்சியைத்தான் அளித்தது. குடிக்கு அடிமையான அந்தத் தந்தை மதுவுக்குச் செலவழிப்பதற்காக, பணம் செலவழித்து உணவுப் பொருள்களை வாங்குவதைத் தவிர்த்து வந்துள்ளார். உணவுப் பொருள்களுக்குப் பதிலாக வெறும் கேக் மற்றும் கொக்க கோலாவை குழந்தைகளுக்கும், மனைவிக்கும் பல நாளகளாகத் தொடர்ந்து கொடுத்து வந்துள்ளார். தினமும், கேக் மற்றும் கொக்க கோலாவை அருந்தியதால் ஒரு குழந்தைக்கு பற்கள் தொடர்பான நோய் வந்துள்ளது. இதேபோல் இன்னொரு குழந்தைக்கு ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக 3 வயது ஆன பிறகும் பேச்சு வராமல் இருந்துள்ளது. 

பல நாள்களாக இந்தக் கொடுமைகளை அனுபவித்து வந்த அவர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். குழந்தையின் சார்பாக நீதிமன்றத்தில் வாதாடிய வழக்கறிஞர் கூறுகையில், ``குடும்பச் செலவுக்குத் தர வேண்டிய பணத்தை எல்லாம் குடிக்கே செலவழிக்கிறார். அவர்களின் வீட்டில் உணவுப் பொருள் என்று எதுவுமே இல்லை. அக்குழந்தைகள் கேக்கை மட்டும் உண்டு வாழ்கிறார்கள். மெத்தை விரிப்பான்கூட இல்லாமல் குழந்தைகள் தூங்குகின்றார்கள். ஏன், பிஞ்சுக் குழந்தைகள் விளையாட ஒரு பொம்மைகூட அந்த வீட்டில் இல்லை. எழுத, படிக்கத் தெரியாமல் இருக்கும் அந்தத் தந்தை குழந்தைகளின் உடல்நலம் குறித்த விபரீதத்தை உணராமல் இருக்கிறார்" என வாதாடினார். வாதங்களைக் கேட்ட நீதிபதி அந்தத் தந்தையை மூன்று மாதம் சிறையில் அடைக்குமாறு உத்தரவிட்டார்.  

நீங்க எப்படி பீல் பண்றீங்க