வெளியிடப்பட்ட நேரம்: 09:37 (27/10/2018)

கடைசி தொடர்பு:10:24 (27/10/2018)

நிறைவேறாத விமான ஆசை; சொந்தமாக விமானத்தை உருவாக்கி அசத்திய சீன விவசாயி

விவசாயி ஒருவருக்கு விமானத்தில் செல்ல ஆசை இருந்ததாகவும் அது நிறைவேறாமல் போகவே தன் சொந்தச் செலவில் ஒரு விமானத்தை உருவாக்கியுள்ளார். 

விமானம்

photo Credits : Twitter/@PDChina

வடகிழக்கு சீனாவைச் சேர்ந்தவர் விவசாயி ஜூ யூ (Zhu Yue). இவருக்கு தன் சிறுவயதிலிருந்தே விமானத்தில் பயணிக்க வேண்டும், அதுவும் சொந்த விமானத்தில் பயணிக்க வேண்டும் என்ற ஆசை இருந்துள்ளது. தனக்கு நடுத்தர வயது வந்ததும் தன்னால் விமானத்தை வாங்கி அதில் பறக்க முடியாது என்பதை உணர்ந்த ஜூ தனக்கென சொந்தமாக புதிய விமானம் ஒன்றை உருவாக்கி அசத்தியுள்ளார்.  பள்ளிப்படிப்பை மட்டுமே முடித்த ஜூ யூ அதன் பிறகு வெங்காயம், பூண்டு ஆகியவற்றை விளையச்செய்யும் விவசாயியாக இருந்துள்ளார். இதைத் தொடர்ந்து கையூன் என்ற நகரத்தில் ஒரு தொழிற்சாலையில் வெல்டிங் வேலையும் செய்துவந்துள்ளார். 

விமானம்

photo Credits : Twitter/@PDChina

தன்னால் விமானத்தில் செல்லமுடியாது என்பதை உணர்ந்த பின்னர் அவர் இணையம் மூலம் பல விமானப் படங்களைச் சேகரித்து ஆராய்ச்சி செய்துள்ளார். இதன் முடிவில் தன் கோதுமை நிலத்தில் சொந்தமாக ஒரு விமானத்தை உருவாக்க முடிவுசெய்துள்ளார். தன் சேமிப்புப் பணமான 3,74,000 அமெரிக்க டாலர்களை கொண்டு சுமார் 60 டன் இரும்புகளுடன் ஏர்பஸ் A320-யை அச்சு அசலாகப் பிரதிபலித்தது போல் தன் விமானத்தை உருவாக்கியுள்ளார். இவரது கனவை நனவாக்க ஐந்து நண்பர்களும் இவருக்கு உதவி செய்து இந்த விமானத்தை வடிவமைத்துள்ளனர். 

விவசாயி உருவாக்கி வரும் விமானம்

photo Credits : Twitter/@PDChina

``நடுத்தரக் குடும்பத்தில் பிறந்ததால் என்னால் விமானத்தில் பயணிக்க முடியாது என நான் உணர்ந்தேன். விமானத்தில் பறக்க முடியாவிட்டாலும் என்னால் சொந்தமாக ஒரு விமானத்தை உருவாக்க முடியும் என்று நம்பி இதைச் செய்துள்ளேன். என் விமானம் அரைகுறையாகத்தான் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது உடனடியாகப் பறக்காது. இதை நான் உணவகமாக மாற்ற உள்ளேன். என் ஹோட்டலுக்கு வரும் வாடிக்கையாளர்களுக்குச் சிவப்புக் கம்பள வரவேற்பு அளிப்பேன். இங்கு வரும் அனைவரும் தங்களை ஒரு எஜமானர்கள் போல் நினைக்கும் அளவுக்கு உபசரிப்பேன். பொதுவாக விமானத்தில் உள்ள 156 இருக்கைகளும் என் விமானத்தில் 36 முதல் வகுப்பு இருக்கைகளாக மாற உள்ளன. விரைவில் என் விமானம் பசியில் தவிப்பவர்களுக்கு உணவு வழங்கும் இடமாக மாறவுள்ளது” என விவசாயி ஜூ யூ தெரிவித்துள்ளார். 

விமானத்தின் உள்ளே

photo Credits : Twitter/@PDChina

தன்னிடம் இருந்த 3,74,000 அமெரிக்க டாலர்களைக் கொண்டு அந்த விவசாயி விமானத்தில் பறந்திருக்க முடியும். ஆனால் தன் சொந்த உழைப்பில் விமானம் உருவாக்க வேண்டும், என்று அவர் எடுத்த முடிவுக்கு சபாஷ்!