வெளியிடப்பட்ட நேரம்: 10:10 (27/10/2018)

கடைசி தொடர்பு:10:24 (27/10/2018)

முன்னாள் அதிபர்களுக்கு வெடிகுண்டு அனுப்பிய விவகாரத்தில் ட்ரம்பின் தீவிர ரசிகர் கைது -அதிர்ச்சி தகவல்

அமெரிக்க முன்னாள் அதிபர்கள் பாரக் ஒபாமா மற்றும் பில் கிளின்டன் வீடுகள் அருகே வெடிகுண்டுகள் கைப்பற்றப்பட்ட சம்பவம் அமெரிக்காவில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. அமெரிக்காவின் அட்டர்னி ஜெனரல் உட்பட 13 முக்கிய அரசியல் மற்றும் ஊடகங்களுக்கு இந்த வெடிகுண்டு பார்சல் அனுப்பப்பட்டது. இந்தச் சம்பவத்துக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனது கடும் கண்டனத்தைப் பதிவு செய்திருந்தார். அமெரிக்காவில் அரசியல் வன்முறைகளுக்கு இடமில்லை என வெள்ளை மாளிகையில் பேசினார். 

ட்ரம்பின் தீவிர ரசிகர்

இந்நிலையில் நேற்று(26-10-2018) இந்த வெடிகுண்டு பார்சல் அனுப்பப்பட்ட விவகாரத்தில் ஃபுளோரிடாவைச் சேர்ந்த சீசர் சயோக் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவருக்கு 56 வயது. இவர் அமெரிக்க அதிபர் ட்ரம்பின் குடியரசு கட்சியைச் சேர்ந்தவர். அதிபர் ட்ரம்பின் தீவிர ரசிகராக அறியப்படும் இவர் மீது பல்வேறு குற்றவழக்குகள் நிலுவையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. 

அமெரிக்காவில் நியூயார்க் நகரில் பிறந்த இவர் தற்போது ஃபுளோரிடா மாகாணத்தில் வசித்து வருகிறார். இவர் தனது சமூக வலைதளத்தில் ட்ரம்ப் -க்கு ஆதரவாகப் பல்வேறு பதிவுகளைப் பதிவிட்டுள்ளார். மேலும் பல்வேறு அரசியல் தலைவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும்படியாகவும் பேசியுள்ளார். அவர்களில் சிலர் இவர் வெடிகுண்டு பார்சல் அனுப்பிய பட்டியலிலும் உள்ளனர். 

கைது

அவர் மீது தற்போது 5 வழக்குகள் பதியப்பட்டுள்ளன. இவர் மீது ஏற்கெனவே திருட்டு, போதைப் பொருள் கடத்துவது போன்ற வழக்குகள் உள்ளது. அவரிடமிருந்து ஒரு வாகனமும் கைப்பற்றப்பட்டுள்ளது. வாகனத்தில் ட்ரம்ப் ஆதரவு ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டிருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

இவரது கைது தொடர்பாகப் பேசிய எஃப்.பி.ஐ அதிகாரி ஒருவர், ``இந்தச் சம்பவத்துக்கான நோக்கம் என்ன என்பது விசாரித்தால்தான் தெரியும். இப்போது எதுவும் சொல்ல முடியாது. நாங்கள் சரியான நபரைக் கைது செய்துள்ளதாக நம்புகிறோம். எனினும் இன்னும் பணி முடியவில்லை. விடை தெரியாத பல வேள்விகள் இருக்கிறது” என்றார். 

வாகனம்

இவர் மீது இருக்கும் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், அவருக்கு 48 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்தக் கைது நடவடிக்கைக்குக் குடியரசு கட்சி காவல்துறைக்குப் பாராட்டு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதிபர் ட்ரம்ப்,  ``கைது செய்யப்பட்டவருக்கு, மற்ற தலைவர்களை விட என்னைப் பிடிக்கும் என்று செய்திகள் வருகிறது. குற்றம் செய்தவர் மீது சட்டப்படியான நடவடிக்கைகள் அரசு எடுக்கும்” என்று தெரிவித்தார்.