வெளியிடப்பட்ட நேரம்: 18:00 (28/10/2018)

கடைசி தொடர்பு:18:00 (28/10/2018)

பிரதமராக ரணில் நீடிப்பார் - முற்றும் மோதல்; அடுத்தடுத்த திருப்பங்களை எதிர்கொள்ளும் இலங்கை!

இலங்கை பிரதமராக ரணில் விக்கரமசிங்கே நீடிப்பார் என இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர் கரு ஜெயசூர்யா அறிவித்துள்ளார். 

கடந்த 2015ம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலுக்குப் பின் பல நாட்களாகத் தீவிர அரசியலிருந்து ஒதுங்கி இருந்தார் இலங்கை முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே. ஆனால் இந்த வருடத்தின் தொடக்கத்தில் நடந்த உள்ளாட்சித் தேர்தல் அவருக்கு உற்சாகத்தை அளித்தது. மூன்றாவது முறையாக அதிபராகப் பதவியேற்க முடியாத சோகத்தில் புது கட்சி ஒன்றை ஆரம்பித்து உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொண்ட அவருக்குப் பெரும்பான்மையான இடங்களில் வெற்றி கிடைத்தது. இதன் பலனாக மீண்டும் தீவிர அரசியலில் இறங்கினார் ராஜபக்சே. மைத்திரி பாலாவுடன் இணைந்து கூட்டணி ஆட்சி நடத்தி ரணிலை கடுமையாக எதிர்த்து வந்தார். கடந்த மார்ச் மாதமே ரணிலை மாற்ற வேண்டும் என  இலங்கை நாடாளுமன்றத்தில் ராஜபக்சே நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்தார். 

ஆனால் அது பலனளிக்கவில்லை. தொடர்ந்து ரணிலுடன் கடுமையான வாக்குவாதங்களை ராஜபக்சே தரப்பு மேற்கொண்டு வந்தது. இதற்கிடையே எதிர்பாராத திருப்பமாக நேற்று முன்தினம் இரவு ரணில் பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்பட்டு ராஜபக்சே புதிய பிரதமராக நியமிக்கப்பட்டார். உடனடியாக மைத்திரி பாலா சிறிசேனா முன்னிலையில் இரவே பதவியும் ஏற்றுக்கொண்டார். ரணில்  விலகல் கடிதம் அளிக்காத நிலையில், மகிந்தவைப் பிரதமராகப் பிரமாணம் செய்துவைத்தது இலங்கையில் அரசியல் குழப்பத்தை ஏற்படுத்தியது. ``இது சட்ட விரோதமானது. மைத்திரியின் நடவடிக்கையை எதிர்த்து நீதிமன்றம் செல்வேன்'' என ரணில் அறிவித்தார். பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ள இந்த விவகாரத்தில் இரு தரப்புக்கும் ஆதரவாக கருத்துகள் எழுப்பப்பட்டு வருகின்றன. ஆனால் ராஜபக்சே - மைத்திரி தரப்புக்கு போதிய பெரும்பான்மை இல்லை. இதனால் அடுத்த கட்ட நகர்வுகள் எவ்வாறு இருக்கும் என பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்பட்டு வருகின்றன. 

ரணில் விக்கரமசிங்கே

இதற்கிடையே, இலங்கை நாடாளுமன்றத்தை வரும் 16ம் தேதி வரை முடக்கி சிறிசேனா உத்தரவிட்டுள்ளார். சிறிசேனாவின் இந்த முடிவு சபாநாயகருக்கு தகவல் தெரிவிக்காமல் எடுக்கப்பட்டுள்ளது. இதனைக் கண்டித்துள்ள சபாநாயகர் கரு ஜெயசூர்யா, ``என்னிடம் கலந்து ஆலோசிக்காமல் நாடாளுமன்றத்தை முடக்கியது தவறு. இந்த முடிவு பெரும் பின்விளைவுகளை ஏற்படுத்தும். உடனடியாக இம்முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும். அதேநேரம் ராஜபக்சே தனது பெரும்பான்மையை நிரூபிக்கும் வரை இலங்கை பிரதமராக ரணில் விக்கரமசிங்கே நீடிப்பார். அவருக்குக்கான சிறப்பு உரிமைகள் அனைத்தும் தொடரும்" என அதிரடியாக அறிவித்துள்ளார். முன்னதாக நாளை ராஜபக்சே அமைச்சரவை பதவியேற்கும் எனவும், ரணிலுக்கு அளிக்கப்பட்டு வந்த பாதுகாப்புகள் வாபஸ் பெறப்படும் என சிறிசேனா அறிவித்தார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க