வெளியிடப்பட்ட நேரம்: 09:14 (29/10/2018)

கடைசி தொடர்பு:09:14 (29/10/2018)

புறப்பட்ட 13 நிமிடங்களில் மாயமான விமானம்! - ஜாவா கடலில் விழுந்து விபத்து

இந்தோனேசியாவிலிருந்து இன்று காலை புறப்பட்ட விமானம் அடுத்த சில நிமிடங்களில் கடலில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

விமானம்


இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தாவிலிருந்து பங்கல் பினாங் தீவு நோக்கிக் கிளம்பிய லையன் ஏர் பயணிகள் விமானம் புறப்பட்ட 13 நிமிடங்களில் மாயமானது. ஜெடி-610 என்ற எண்ணுடைய இந்த விமானத்தில் சுமார் 188 பயணிகள் இருந்ததாக அதிகாரபூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன. இது போயிங் 737 மேக்ஸ் 8 வகையைச் சேர்ந்த விமானம் என்றும் கூறப்படுகிறது.

இன்று காலை ஜகார்த்தாவிலிருந்து 6:20 மணிக்கு லயன் ஏர் விமானம் புறப்பட்டது. கிளம்பிய 13 நிமிடங்களில் அதாவது சரியாக 6:33 மணிக்கு விமானத்தின் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது. 7:20 மணிக்கு பங்கல் பினாங் தீவு சென்றிருக்கவேண்டிய விமானம் நடு வழியில் காணாமல் போயுள்ளது. இதைத்தொடர்ந்து நடந்த தேடுதல் வேட்டையில் விமானம் ஜாவா கடலில் விழுந்துள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
 

விமான விபத்துக்குப் பிறகு இந்தோனேசியாவின் தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் விமானம் விழுந்த இடத்துக்கு விரைந்துள்ளதாகவும் மாயமான விமானம் தொடர்பாக வேறு எந்த அதிகாரபூர்வ தகவலையும் தற்போது தெரிவிக்கமுடியாது எனவும் அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.