`வேறு வேலையில் சேர இருந்தார்!' - விபத்துக்குள்ளான விமானத்தை ஓட்டிய இந்திய பைலட்டுக்கு நடந்த சோகம் | the pilot of the crashed indonesian flight is an indian

வெளியிடப்பட்ட நேரம்: 14:10 (29/10/2018)

கடைசி தொடர்பு:14:10 (29/10/2018)

`வேறு வேலையில் சேர இருந்தார்!' - விபத்துக்குள்ளான விமானத்தை ஓட்டிய இந்திய பைலட்டுக்கு நடந்த சோகம்

விபத்துக்குள்ளான இந்தோனேசிய விமானத்தை ஓட்டியவர், இந்தியாவைச் சேர்ந்த 31 வயதான பைலட் பாவ்யே சுனேஜா என்று தகவல் வெளியாகியுள்ளது.

இந்தோனேசிய

இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தாவிலிருந்து பங்கல் பினாங் தீவு நோக்கிக் கிளம்பிய போயிங் 737 மேக்ஸ் 8 வகையைச் சேர்ந்த லையன் ஏர் பயணிகள் விமானம் புறப்பட்ட 13 நிமிடங்களில் மாயமானது. ஜெடி-610 என்ற எண்ணுடைய இந்த விமானத்தில் 188 பயணிகள் இருந்தனர். விமான போக்குவரத்துத் துறை அமைச்சகம், விபத்துக்குள்ளான விமானத்தில் பெரியவர்கள் 178 பேர், சிறுவர் ஒருவர், இரண்டு குழந்தைகள், ஐந்து விமானப் பணியாளர்கள், இரண்டு விமான ஓட்டிகள் இருந்ததாகத் தெரிவித்துள்ளது.

இதில் ஒரு  விமான ஓட்டி பாவ்யே சுனேஜா. இவர் டெல்லியின் மயூர் விஹார் பகுதியைச் சார்ந்தவர். பெல் ஏர் இன்டர்நேஷனல் நிறுவனத்தில்தான் பைலட் உரிமம் வாங்கியிருக்கிறார். இந்தோனேசியாவின் லயன் ஏர் நிறுவனத்தில் கடந்த 2011-ம் ஆண்டு பணியில் சேர்ந்துள்ளார். இவர் சமீபத்தில் இந்தியாவுக்குத் திரும்பி வர முடிவு எடுத்திருந்ததாகத் தெரிகிறது. இந்தியாவில் ஒரு பிரபல விமான சேவை நிறுவனத்தில் இவர் பணியில் சேர இருந்ததாகவும், தன் சொந்த ஊருக்குத் திரும்ப வர முயன்றதாகவும் இவரை அறிந்தவர்கள் கூறுகின்றனர். இவர் சமீபத்தில் திருமணமானவர் என்று இவரது சமூக வலைதள பக்கங்களில் தெரிகிறது.

இந்த நிலையில், விபத்துக்குள்ளான விமானத்தில், உயிர் பிழைத்தவர்கள் இருக்கிறார்களா எனத் தேடுதலில் தீவிரம் காட்டி வருகிறது இந்தோனேசியா அரசு.