வெளியிடப்பட்ட நேரம்: 21:45 (29/10/2018)

கடைசி தொடர்பு:21:45 (29/10/2018)

`பட்டம் வேண்டாம்; காதல் மட்டும் போதும்’ - வியக்கவைக்கும் ஜப்பான் இளவரசியின் காதல் கதை!

தன் காதலுக்காக இளவரசி பட்டத்தைத் துறந்து, சாமானியர் ஒருவரை மணமுடிந்துகொண்டார் ஜப்பான் நாட்டு இளவரசி அயாகோ. 

இளவரசி

ஆயிரம் பேர் குழுமியிருந்து வாழ்த்துச் சொல்ல அவர்கள் இருவரும் நடந்து வருகின்றனர். `பன்சாய்' மொழியில் அவர்களுக்கான வாழ்த்துகளைச் சுற்றியிருந்தவர்கள் உதிர்க்கின்றனர். இப்படியாய் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் மெய்ஜி ஷெரின் நகரத்தில் நடைபெறும் இந்தத் திருமணம் வழக்கமானதல்ல. தியாகத்தின் மூலம் சாத்தியமானது. ஜப்பான் நாட்டின் இளவரசி அவள். அந்நாட்டின் மன்னர் ஹிஸாக்கோவின் மகள். 28 வயதான அயாகோ, கடந்த 2013-ம் ஆண்டு டோக்கியோ பல்கலைகழகத்தில் படித்தபோது அவருக்கும், அங்கு சட்ட ஆலோசகராகப் பணியாற்றிய கெய் மோரியாவுக்குமிடையே காதல் மலர்ந்தது. இவர்கள் காதலுக்கு இருவரின் வீட்டாரும் சம்மதம் தெரிவித்திருந்தனர். அயாகோ-கெய் மோரியா, திருமணம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு கடந்த ஆண்டு வெளியானது.

அயாகோ

 

இதையடுத்து சில நாள்களில் நிச்சயதார்த்தமும் நடந்து முடிந்தது. ஆனால், திருமண தேதி அறிவிக்கப்படாமலே இருந்தது. அந்நாட்டின் சட்டம்தான் இவர்களது திருமணத்துக்குத் தடையாக இருந்தது. ஜப்பான் நாட்டின் சட்டத்தைப் பொறுத்தவரை, அரசர் குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள் சாமானியர்களை மணந்தால் அவர்கள் அரசர் குடும்பத்திலிருந்து வெளியேற வேண்டும். இந்தச் சிக்கலில் தவித்துக்கொண்டிருந்த அயாகோ துணிச்சலான முடிவொன்றை எடுத்தார். தன் காதலுக்காக இளவரசி பட்டத்தைத் துறக்க முன்வந்தார். அதன்படி, சாமானிய காதலரான கெய் மோரியாவை, கரம்பிடித்துள்ளார். 32 வயதான கெய் மோரியா, தற்போது சரக்குப் போக்குவரத்துத் துறையில் பணியாற்றி வருகிறார். இதுகுறித்து கெய் மோரியா, ``அவளை ஒருபோதும் கைவிட மாட்டேன். மகிழ்வான வாழ்க்கையைத் தொடங்க இருக்கிறோம்'' என்றார். மேலும் அயாகோ கூறுகையில், ``நான் மிகவும் பாக்கியம் பெற்றவள்; நான் என் முடிவில் எப்போதும் உறுதியாக இருப்பேன்'' என்றார்.