வெளியிடப்பட்ட நேரம்: 08:47 (30/10/2018)

கடைசி தொடர்பு:08:50 (30/10/2018)

‘விபத்துக்கு முந்தைய நாள் அந்த விமானத்தில்....!’ - லயன் ஏர் சி.இ.ஓ. அதிர்ச்சி தகவல்

இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் இருந்து புறப்பட்டு விபத்துக்குள்ளான விமானம் அதற்கு முந்தைய தினம் பழுதானதாக தற்போது தகவல்கள் கூறப்படுகின்றன. 

லைன் ஏர் மீட்புப்பணிகள்

இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தாவிலிருந்து பங்கல் பினாங் தீவுக்கு அந்நாட்டு நேரப்படி நேற்று காலை 6:20 மணிக்கு லயன் ஏர் விமானம் கிளம்பியுள்ளது. புறப்பட்ட அடுத்த 13 நிமிடங்களில் வடகிழக்கு ஜாவா கடலில் விழுந்து நெருங்கியது. முதலில் இந்த விமானம் காணாமல் போனதாகத் தெரிவிக்கப்பட்டு பிறகு கடலில் விழுந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த விமானத்தில் பயணிகள், விமான ஓட்டிகள் என மொத்தம் 189 பேர் பயணித்துள்ளனர். 

விமானம் கடலில் விழுந்து விபத்துக்குள்ளானதால் அதிலிருந்த அனைவரும் இறந்திருக்கக் கூடும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விமானத்தில் பயணித்தவர்களில் 90 பேர் ஜகார்த்தாவைச் சேர்ந்தவர்கள் என்றும் மீதமுள்ள 76 பேர் மற்ற இடங்களைச் சேர்ந்தவர்கள் என்றும் அதிகாரபூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், அதே விமானத்தில் 20 ராணுவ அதிகாரிகள் பயணித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விமானம் கடலில் விழுந்தது உறுதி செய்யப்பட்டவுடன் இந்தோனேசியா தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர், உள்நீச்சல் வீரர்கள் மற்றும் ராணுவத்தினர் என சுமார் 250-க்கும் மேற்பட்ட வீரர்கள் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து இறந்தவர்களின் உடல்களைத் தேடும் பணியில் ஈடுபட்டனர். தற்போது அங்கே இரவு பகலாக தேடுதல் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதுவரை 25 பேரின் உடல்கள் மீட்கப்பட்டு மற்ற நடவடிக்கைகளுக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. 

விமானம் விபத்துக்குள்ளான செய்தி அறிந்ததும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மீட்புப் பகுதிகளுக்கு வரத்தொடங்கிவிட்டனர். இதனால் ஜாவா துறைமுகம் பகுதியில் பெரும் அழுகை குரல்களே கேட்கிறது.


விமானம் தொடர்பாக லயன் ஏர் சி.இ.ஓ எட்வர்டு சிரைட் (Edward Sirait) ஒரு அதிர்ச்சிகர செய்தியை தற்போது தெரிவித்துள்ளார், ``நேற்று முன்தினம் அதாவது விபத்து நடப்பதற்கு முந்தைய நாள் இரவு இதே விமானம் இந்தோனேசியாவின் பலி தீவிலிருந்து ஜகார்த்தாவுக்கு வந்தது. அப்போது விமானத்தில் சிறு பழுது இருந்தது. விமானம் ஜகார்த்தா வந்து இறங்கியவுடன் பொறியாளர்கள் பழுதைக் கண்டுபிடித்து சரிசெய்துவிட்டனர். லயன் ஏர் விமானம் பறப்பதற்குத் தயார் என்ற அறிவிப்புக்குப் பின்னரே நேற்று காலை புறப்பட்டது” எனக் கூறியுள்ளார். விபத்தில் உயிரிழந்தவர்களைத் தேடும் பணிகள் மட்டுமே தற்போது தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. விபத்துக்கான காரணம் குறித்த முழுமையான தகவல்கள் இன்னும் கண்டறியப்படவில்லை என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.