வெளியிடப்பட்ட நேரம்: 13:30 (30/10/2018)

கடைசி தொடர்பு:13:30 (30/10/2018)

`காற்று மாசுபாட்டால் வருடத்துக்கு 6 லட்சம் குழந்தைகள் இறக்கின்றன' - ஆய்வில் அதிர்ச்சித் தகவல்!

ஒவ்வொரு வருடமும் 15 வயதுக்கு உட்பட்ட 6 லட்சம் குழந்தைகள் அசுத்தமான காற்றால் இறப்பதாக உலக சுகாதார அமைப்பு விடுத்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குழந்தைகள்

ஒவ்வொரு நாளும், 15 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளில் 93 சதவிகிதம் அதாவது 1.8 பில்லியனுக்கும் அதிகமான குழந்தைகளும், 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளில் 630 மில்லியன் குழந்தைகளும் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். 2016-ம் ஆண்டு மட்டும் 6 லட்சம் குழந்தைகள் மாசுபட்ட காற்று காரணமாகக் குறைந்த சுவாச நோயால் இறந்திருக்கிறார்கள் என்று உலக சுகாதார நிறுவன அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது ஒரு மோசமான விளைவாகும். தினம் தினம் மாசுபடும் காற்றானது, குழந்தைகளின் உயிரை எடுத்துக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு குழந்தையும் சுத்தமான காற்றை சுவாசித்தால் மட்டுமே, அவர்களால் முழுத்திறனையும் பெற்று ஆரோக்கியமாக வாழ முடியும். உலக அமைப்பின் தகவலின்படி, ஒவ்வொரு ஆண்டும் பத்தில் ஒன்பது பேர் ஆபத்தான மாசுக்காற்றை சுவாசிக்கிறார்கள். அதனால் சுமார் 7 லட்சம் மக்கள் மரணத்தைத் தழுவுகிறார்கள். இதில் கொடுமையானது, உலக அளவில் பத்தில் ஒரு குழந்தை இறந்து விடுவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவிக்கிறது.  இது தொடர்பாக உலக சுகாதார ஆய்வு நிறுவனம் நடத்திய ஆய்வில், 'குழந்தைகள் 2.5 மைக்ரோ மீட்டர் விட்டம் கொண்ட ஆபத்தான துகள்களான சல்பேட், கார்பன் போன்ற நச்சு கலந்த காற்றைச் சுவாசித்தது தெரியவந்துள்ளது. இதனால், நுரையீரல் மற்றும் இதயத்தில் ஆழமாக ஊடுருவிப் பாதிப்பை ஏற்படுத்துகிறது. 

குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் வரிசை நாடுகளில் உள்ள மொத்தக் குழந்தைகளில் 98 சதவிகிதம் பேர் உலக சுகாதார நிறுவனத்தின் ஆய்வில் 2.5 மைக்ரோ மீட்டர் குறைந்த அளவு காற்றை சுவாசித்திருக்கிறார்கள். ஏழை நாடுகளில் உள்ள குழந்தைகள்தான் அதிக ஆபத்தில் இருக்கிறார்கள். உயர் வருவாய் நாடுகளில் 52 சதவிகிதம் குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளது' எனத் தெரிவித்துள்ளது.