வெளியிடப்பட்ட நேரம்: 13:50 (30/10/2018)

கடைசி தொடர்பு:13:50 (30/10/2018)

800 அடி உயரத்திலிருந்து விழுந்த இந்திய தம்பதி - ஒரு வாரத்துக்குப் பின் கண்டுபிடிக்கப்பட்ட உடல்கள்

அமெரிக்காவின் யோஸ்மைட் தேசிய பூங்காவில் உள்ள 800 அடி உயர மலையிலிருந்து இந்திய தம்பதி கடந்த வாரம் விழுந்துள்ளனர். 

இந்திய தம்பதி

அமெரிக்காவில் உள்ள யோஸ்மிட் என்ற தேசிய பூங்காவில் (Yosemite National Park) உள்ள தஃப்ட் பாய்ண்டில் (Taft Point) இருந்து கடந்த வாரம் ஒரு தம்பதி கீழே விழுந்துள்ளனர். இவர்களின் உடல்கள் பூங்காவின் அடிவாரத்தில் இருந்து நேற்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. அதன் பின் நடந்த விசாரணையில் இவர்கள் பெயர் விஷ்ணு விஷ்வானந்த் (29), மீனாட்சி மூர்த்தி (30) என்றும் இந்தியாவின் கேரளாவைச் சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது. 

விஷ்ணு மற்றும் மீனாட்சி ஆகிய இருவரும் முன்னதாக நியூயார்க் நகரில் இருந்துள்ளனர். அதன்பின் விஷ்ணுவுக்கு பணி மாறுதல் ஏற்பட்டதால் கடைசியாக சான் ஃபிரான்சிஸ்கோவுக்கு குடிபெயர்ந்துள்ளனர். இந்தத் தம்பதி உலகம் சுற்றுவதில் மிகுந்த ஆர்வம் உடையவர்கள் என்பது ‘Holidays and HappilyEverAfters' என இவர்களின் வலைதள பக்கத்திலிருந்து கண்டறியப்பட்டுள்ளது. அந்தப் பக்கத்தில் இருவரும் இணைந்து சென்ற அனைத்து இடங்கள், அழகிய தருணங்களின் புகைப்படங்களையும் பதிவிட்டுள்ளனர். 

கடந்தவாரம் சுற்றிப் பார்க்கவே யோஸ்மிட் பூங்காவுக்குச் சென்றுள்ளனர். நேற்று முன்தினம் பூங்காவின் பள்ளத்தாக்குப் பகுதிக்கு வந்த பார்வையாளர் ஒருவர் இவர்களின் உடல்கள் கிடப்பதைப் பார்த்து பூங்கா நிர்வாகத்தினருக்குத் தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து வனத்துறை அதிகாரிகள் தம்பதியின் உடல்களைக் கைப்பற்றினர். 

இந்தச் சம்பவம் குறித்து பூங்காவின் செய்தி தொடர்பாளர் பேசும்போது, ``அவர்கள் விழுந்ததற்கான காரணம் இதுவரை எங்களுக்குத் தெரியவில்லை. அன்றைய தினம் என்ன நடந்தது என்பதை அறிய நாங்கள் முயற்சி செய்துகொண்டிருக்கிறோம். இது சோகமான நிகழ்வு” எனக் கூறியுள்ளார். எப்படி இந்தத் தம்பதி குதித்தார்கள், எதற்காகக் குதித்தார்கள், இது விபத்தா அல்லது கொலையா என்ற பல்வேறு கோணங்களில் புலனாய்வு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். 

விஷ்ணு மற்றும் மீனாட்சி ஆகிய இருவருக்கும் கடந்த 2014-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றுள்ளது. இருவரும் மென்பொறியாளர்களாக வேலை பார்த்துவருகின்றனர். இவர்கள் குறித்து நண்பர்கள் கூறும்போது, `` விஷ்ணு மிகவும் நல்ல பையன். மிகவும் திறமையானவர். அவர்கள் மகிழ்ச்சியான தம்பதியாகவே வாழ்ந்துவந்தனர். இருவருமே நேர்மறையான எண்ணம் கொண்டவர்கள். மீனாட்சி, உலகத்தை ஆராய்ச்சி செய்து வாழ்க்கையின் ஆழமான அர்த்தத்தைக் கண்டறிய நினைக்கும் பெண். இருவரின் இறப்பு மிகவும் அதிர்ச்சியாக உள்ளது” எனத் தெரிவித்துள்ளனர்.