வெளியிடப்பட்ட நேரம்: 14:30 (30/10/2018)

கடைசி தொடர்பு:15:12 (30/10/2018)

வீடு வாங்கலாம்.... நிலம் வாங்கலாம்... நியூஸிலாந்தில் ஒரு ஊரே வாங்கலாம் ரெடியா?

நியூஸிலாந்தில், விற்பனைக்கு வந்திருக்கிறது லேக் வைடாக்கி என்னும் ஒரு சிறிய ஊர்.

நியூசிலாந்தில்

நியூஸிலாந்து தெற்கு தீவில் லேக் வைடாக்கி என்னும் இடத்தில் ஆட்கள் இல்லாத ஒரு காலி கிராமம் 2.8 மில்லியன் டாலருக்கு விற்பனைக்கு வந்திருக்கிறது.1930-களில் இங்கு கட்டப்பட்ட அணையின் கட்டுமானப் பணிகளுக்காக வேலை செய்பவர்களுக்காக உருவாக்கப்பட்ட இந்தக் கிராமம், 1980-களுக்குப் பிறகு யாரும் வசிக்காமல் காலியானது. மக்கள் நகர வாழ்க்கையைத் தேடிப் போனதாலும், அணை கட்டமைப்புப் பணிகள் முடிந்து, அனைத்தும் இயந்திரமயம் ஆனதாலும் அங்கு மக்கள் வசிப்பதற்கான தேவை இல்லாமல் போனதாகவும் தெரிவிக்கிறார்கள்.

நியூசிலாந்தில்

இப்போது விற்பனைக்கு வந்திருக்கும் இந்த நகரம், மேஜை, நாற்காலி, கட்டில், பீரோ என அனைத்தும் உள்ள, தலா மூன்று அறைகள் கொண்ட மொத்தம் எட்டு வீடுகள், ஒரு உணவகம், ஒரு தங்கும் விடுதி, முழுதாகப் பயன்பாட்டில் இருக்கும் ஒரு தொழில் சார்ந்த சமையலறை, பொழுதுபோக்குக்காக பில்லியர்ட்ஸ் டேபிள் போன்ற விளையாட்டுகள், கார் பார்க்கிங் தளங்கள், நீர் வசதி, மின் வசதி போன்ற பல கட்டமைப்புகளோடு நல்ல பயன்பாட்டு நிலையில் உள்ளது. தற்போது அந்தப் பகுதியைச் சுற்றி சுற்றுலாப் பயணிகள் வருவதும் அதிகரித்திருக்கிறது.

நியூசிலாந்தில்

ஆல்ப்ஸ் டு ஓஷன் (Alps to ocean) என்னும் மிதிவண்டிப் பாதை அமைக்கப்பட்டிருப்பது இதற்கான முக்கியமான காரணம் என்கின்றனர். இந்த மிதிவண்டிப் பாதை லேக் வைடாக்கி கிராமத்தைக் கடந்து செல்கிறது. இதனால், விடுமுறை தினங்களில் ஓய்வெடுக்க விரும்பும் மக்கள், இயற்கை எழில் கொஞ்சும் இந்தச் சுற்றுலா தளத்தைத் தேர்ந்தெடுக்க விரும்புவார்கள் என்கின்றனர் ரியல் எஸ்டேட் வியாபாரிகள். மேலும், இங்கிருந்து மிக அருகில் இருக்கும் கிராமம் குரோவ், இங்கு, சுமார் 300 பேர் வசிக்கிறார்கள். இந்தக் கிராமத்தில் இருந்து ஏறத்தாழ 200 கிலோமீட்டர் தொலைவில் குயின்ஸ்லாந்து, டுனிடின் ஆகிய பெரு நகரங்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

நியூசிலாந்தில்

ஆனால், இதில் ஒரே ஒரு தடை இருக்கிறது. இதை வாங்குவதற்கு உங்களுக்கு நியூஸிலாந்து குடியுரிமை வேண்டும். வெளிநாட்டவர் யாரும் நியூஸிலாந்தில் நிலம் வாங்க அந்நாட்டு அரசு அனுமதிப்பதில்லை. இதற்கான சட்டத்திருத்தம் 2018-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கொண்டுவரப்பட்டது. அந்நாட்டு குடிமகன்களுக்கு மட்டுமே அங்கு நிலம் வாங்க அனுமதியளிப்பதற்கான காரணத்தை விளக்கும் அந்நாட்டு அமைச்சர் டேவிட் பார்க்கர், `` வெளிநாட்டவர் நிலம் வாங்க அனுமதியளித்தால், நிலத்தின் விலை ஏற்றம் மிக அதிகமாகும். இதனால், நியூஸிலாந்து மக்கள் அவர்கள் வாழ்ந்த, வளர்ந்த இடங்களில் வசிக்க முடியாமல் போகிறது. நியூஸிலாந்து மக்கள் இந்நாட்டில் நிலம் வாங்குவது அவர்கள் பிறப்புரிமை" என்று கூறியுள்ளார்.

உலக அளவில் கணக்கிடப்படும் மனித வாழ்க்கைத் தர பட்டியல், மனித மகிழ்ச்சிப் பட்டியல் ஆகியவற்றில் நியூஸிலாந்து எப்போதும் முன்னணி வகிக்கும். இத்தகைய சட்ட வரைவுகள்தான் அதைச் சாத்தியமாக்குகிறது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. நிலம் எங்கள் உரிமை என அவர்களுக்குப் புரிந்திருக்கிறது.