வெளியிடப்பட்ட நேரம்: 20:10 (30/10/2018)

கடைசி தொடர்பு:20:10 (30/10/2018)

`குடிமக்கள் அல்லாதோருக்குப் பிறக்கும் குழந்தைக்கு குடியுரிமை இல்லை’ - ட்ரம்பின் அதிரடி முடிவு!

அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்தவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கான குடியுரிமை ரத்து செய்யப்படும் என அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

ட்ரம்ப்


ஒரு நாட்டிலிருந்து குடிபெயர்ந்து, மற்றொரு நாட்டில் வாழ்ந்து வருபவர்களுக்கு குடியுரிமை கிடைப்பது கடினம். ஆனால், அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு குடியுரிமை கொடுக்க சில நாடுகள் முன்வரும். அமெரிக்காவும் இதையே நடைமுறையைப் பின்பற்றி வந்தது. இந்நிலையில் `ஆக்சியாஸ் ஆன் ஹெச்பிஓ’ (“Axios on HBO”) தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டி, பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அவர் பேசுகையில், ``மற்ற நாடுகளிலிருந்து குடிபெயர்ந்து அமெரிக்காவில் வசிப்பவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கு, எங்கள் நாட்டின் சார்பில் குடியுரிமை வழங்கப்படும். அபத்தமான இந்த நடைமுறையை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும். இந்த முடிவு குறித்து வெள்ளை மாளிகை வழக்கறிஞர்கள் பரீசிலனை செய்து வருகின்றனர்” என்றார். ஆனால், இந்த உத்தரவு எப்போது அமலுக்கு வரும் என்பது குறித்து எந்த அறிவிப்பையும் அவர் வெளியிடவில்லை. அமெரிக்க அரசியலைப்பு சட்ட 14-வது திருத்தத்தின்படி, அந்நாட்டில்  பிறக்கும் குழந்தைகளுக்கு அமெரிக்க குடியுரிமை பெறுவதற்கான முழு உரிமை உள்ளது என்று கூறுவது குறிப்பிடத்தக்கது.