வெளியிடப்பட்ட நேரம்: 13:04 (31/10/2018)

கடைசி தொடர்பு:13:04 (31/10/2018)

அமெரிக்காவில் 800 அடி பள்ளத்தில் கிடந்த கேரள தம்பதி சடலம்! - சகோதரர் அதிர்ச்சித் தகவல்

அமெரிக்காவில் 800 அடி பள்ளத்தில் விழுந்து இறந்த இந்தியத் தம்பதி எப்படி இறந்தார்கள் என்பதற்கான அதிர்ச்சியளிக்கும் காரணம் தற்போது வெளியாகியுள்ளது. 

தம்பதி

அமெரிக்காவில் உள்ள யோஸ்மிட் என்ற தேசியப் பூங்காவில் (Yosemite National Park) உள்ள தஃப்ட் பாய்ண்டில் (Taft Point) இருந்து கடந்த வாரம் ஒரு தம்பதி கீழே விழுந்துள்ளனர். இவர்களின் உடல்கள் பூங்காவின் 800 அடி பள்ளத்தில் நேற்று கண்டெடுக்கப்பட்டது. அதன் பின் நடந்த விசாரணையில் இவர்கள் பெயர் விஷ்ணு விஷ்வானந்த் (29), மீனாட்சி மூர்த்தி (30) என்றும் இந்தியாவின் கேரளாவைச் சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்தது. இருப்பினும் தம்பதியின் இறப்புக்கான காரணம் குறித்துத் தெரியாமல் புலனாய்வு அதிகாரிகள் திணறி வந்தனர். எப்படி இந்தத் தம்பதி கீழே விழுந்தார்கள், எதற்காகக் விழுந்தார்கள், இது விபத்தா அல்லது கொலையா என்ற பல கோணங்களில் விசாரணை நடைபெற்றுவந்தது 

இந்த நிலையில். இந்தச் சம்பவம் குறித்து ஃபாக்ஸ் நியூஸ் (Fox news) ஊடகத்துக்குப் பேட்டியளித்துள்ள விஷ்ணு விஷ்வானந்தின் சகோதரர் ஜிஷ்ணு, ``அவர்கள் இருவரும் செல்ஃபி எடுக்க முயன்றபோதுதான் கீழே விழுந்திருக்க வேண்டும். மிகவும் பிரபலமான கலிபோர்னியா பூங்காவின் உயரமான இடங்களில் எந்தவித பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்படவில்லை. அந்தப் பகுதிகளில் ஒரு கண்காணிப்புக் கேமரா கூட இல்லை. கடந்த செவ்வாய்க்கிழமை இவர்களின் உடல்கள் மீட்கப்பட்ட இடத்தில் ஒரு கேமராவும், ட்ரைபாடும் இருந்துள்ளது. இதைப் பூங்கா அதிகாரிகள் உயர் ரக தொலைநோக்கியின் மூலம் பார்த்துள்ளனர்” எனக் கூறியுள்ளார். 

இந்தத் தம்பதி உலகம் சுற்றுவதில் மிகுந்த ஆர்வம் உடையவர்கள் என்பது ‘Holidays and HappilyEverAfters' என இவர்களின் வலைதள பக்கத்திலிருந்து கண்டறியப்பட்டுள்ளது. அந்தப் பக்கத்தில் இருவரும் இணைந்து சென்ற அனைத்து இடங்கள், அழகிய தருணங்களின் புகைப்படங்களையும் பதிவிட்டுள்ளனர். மீனாட்சி இறப்பதற்கு ஒரு மாதத்துக்கு முன்னாள் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ஆபத்தான இடங்களில் நின்று செல்ஃபி எடுப்பது தொடர்பான விழிப்பு உணர்வு பதிவை வெளியிட்டிருக்கிறார். அதில், ``நம்மில் பலர் உயரமான பாறைகளில் நின்று புகைப்படம் எடுக்கும் முயற்சிகளில் ஆர்வமுடையவர்கள். ஆனால், அந்த விளிம்பில் காற்று நம்மை அசைத்துப் பார்க்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா. நம் வாழ்க்கையை ஒரு புகைப்படத்துக்காக இழக்க வேண்டுமா” இவ்வாறு பதிவிட்டிருந்தார். இந்த வருடம் மட்டும் அந்தப் பூங்காவில் செல்ஃபி எடுத்தபோது 30 பேர் இறந்துள்ளதாகப் பூங்கா நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.