வெளியிடப்பட்ட நேரம்: 19:00 (31/10/2018)

கடைசி தொடர்பு:19:00 (31/10/2018)

100 பேரைக் கொன்ற செவிலியர்! - உலகப் போருக்குப் பிறகு நடந்த மிகப் பெரும் கொடூர சம்பவம்

ஜெர்மனியில், ஓர் ஆண் செவிலியர் தன் கண்காணிப்பில் இருந்த 100 நோயாளிகளை வீரியம்மிக்க ஊசி போட்டு கொலைசெய்துள்ளார். 

ஜெர்மனி செவிலியர்

ஜெர்மனியைச் சேர்ந்த 41 வயதான முன்னாள் ஆண் செவிலியர் நீல்ஸ் ஹோகேல் (Niels Hoegel). இவர் 100 கொலைகளைச் செய்துள்ளார். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நீல்ஸ், அந்தக் கொலைகளைத் தான் தான் செய்தேன் எனவும் ஒப்புக்கொண்டுள்ளார். ஜெர்மனியில் நடந்த உலகப் போருக்குப் பிறகு நடந்த மிகப்பெரும் கொடூரச் சம்பவமாக இது கருதப்படுகிறது. 

நீல்ஸ் ஹோகேல், கடந்த 2000 முதல் 2005-ம் ஆண்டு வரை தெற்கு ஜெர்மனியின் ஓல்டன்பெர்க் மற்றும் டெல்மென் ஹோர்ஸ்ட் ஆகிய நகரங்களில் உள்ள மருத்துவமனைகளில் செவிலியராகப் பணிபுரிந்துள்ளார். 2005-ம் ஆண்டு டெல்மென் ஹோர்ஸ்ட் மருத்துவமனையில் இவர் கண்காணிப்பில் இருந்த நோயாளிக்கு, மருத்துவர் பரிந்துரைக்காத அளவு வீரியம் மிக்க ஊசியைப் போட்டதால், முதன் முதலில் இவர்மீது கொலைமுயற்சி வழக்கு பதிவுசெய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணையில், தொடர்ந்து பல அதிர்ச்சிகர விசயங்கள் வெளிவரத் தொடங்கியது. 

நீல்ஸ் ஹோகேல் எதற்காக மருத்துவர் பரிந்துரைக்காத வீரியம் மிக்க மருந்தை நோயாளிக்குச் செலுத்தினார் என்பதை அறியவே முதலில் விசாரணை தொடங்கப்பட்டது. பிறகு, 2008-ம் ஆண்டு விசாரணை முடிவில், கொலை முயற்சிக்காக இவருக்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, நீல்ஸ் கண்காணிப்பில் இருந்த நோயாளிகள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக அவர்களின் உறவினர்கள் தொடர்ச்சியாகப் புகார் தெரிவிக்கத் தொடங்கினர். பின்னர், நீல்ஸ் வேலைசெய்த மருத்துவமனைகளில் மர்மமான முறையில் இறந்தவர்கள் பற்றிய விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது. இதற்கிடையே, நீல்ஸ் மனநல மருத்துவர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். அதில்தான், 30 கொலைகளைச் செய்ததாக ஒப்புக்கொண்டார். இதைத் தொடர்ந்து நடந்த விசாரணையில், நீல்ஸ் இருந்த மருத்துவமனைகளில் 200 பேர் மர்மமான முறையில் இறந்ததாகக் கூறப்பட்டது. இந்த 200 பேர் கொலைக்கும் நீல்ஸ் காரணமா என்ற கோணத்தில் தற்போது விசாரணை நடைபெற்றுவருகிறது. நீல்ஸ் ஒப்புக்கொண்ட 30 கொலைக்காக, இவருக்கு 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 'கொலை செய்வது இவரின் நோக்கமில்லை' என மனநல மருத்துவர் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பான வழக்கு, ஓல்டன்பெர்க் நீதிமன்றத்தில் நடைபெற்றுவருகிறது. நேற்று ஆஜரான செவிலியரிடம் நீதிபதி செபாஸ்டின், ‘இந்தக் கொலை செய்ததை நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்களா’ எனக் கேட்டுள்ளார். அதற்கு நீல்ஸ், ‘ஆம்’ எனப் பதிலளித்துள்ளார்.  அதன்பிறகு, பேசிய பொதுநல வழக்கறிஞர், நீல்ஸ் ஹோகேல் கொலைசெய்த அனைத்து நோயாளிகளின் பெயர்களையும் வாசித்தார். தொடர்ந்து 2000 - 2005-ம் ஆண்டு வரை இவரது கண்காணிப்பில் இருந்த 130 நோயாளிகள் இறந்துள்ளனர். ஓல்டன்பெர்க் மருத்துவமனையில் 36 நோயாளிகளுக்கும், டெல்மென் ஹோர்ஸ் மருத்துவமனையில் 64 நோயாளிகளுக்கும் வீரியம் மிக்க ஊசி போட்டுள்ளார். பிறகு,100 பேருக்கும் அளித்த சிகிச்சை பலனளிக்காமல், அனைவரும் உயிரிழந்துள்ளது உறுதியாகியுள்ளது எனக் கூறினார். 

இவரிடம் வரும் நோயாளிகளுக்கு வீரியம் மிக்க ஊசி போட்டு, அவர்களை மரணத்தின் விளிம்புவரை கொண்டுசென்று, மீண்டும் காப்பாற்றி, தன் திறமையை வெளிப்படுத்துவது நீல்ஸுக்கு ஒரு போதையாக இருந்துள்ளது. அதனால்தான் இவ்வாறு செய்துள்ளதாக தற்போதுவரை நடைபெற்ற விசாரணையில் தெரியவந்துள்ளது. இருப்பினும், இந்த வழக்கில் தொடர்ந்து மர்மங்களே நிலவிவருவதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.