வெளியிடப்பட்ட நேரம்: 08:00 (01/11/2018)

கடைசி தொடர்பு:08:00 (01/11/2018)

தென் கொரிய அதிபர் அணிந்திருப்பது மோடி ஜாக்கெட்டா... நேரு ஜாக்கெட்டா...? - வைரலான விவாதம்

இந்திய பிரதமர் மோடி, ஆடை விஷயங்களில் தனிக் கவனம் செலுத்துபவர். இது தொடர்பாக அவர் பாராட்டையும், விமர்சனங்களையும் சந்தித்திருக்கிறார். தனது ஆடை தொடர்பாக பல்வேறு தருணங்களில் அவரே பேசியும் இருக்கிறார். இது அனைவரும் அறிந்ததே. ஆனால், தற்போது தென் கொரிய அதிபருக்கு, பிரதமர் மோடி அனுப்பிய கிப்ட் தான் ட்விட்டர் விவாத களத்தின் ட்ரெண்ட்.

தென் கொரிய அதிபர்

Photo Credit: Twitter/moonriver365

தென் கொரிய அதிபர் மூன் ஜே-இன், நேற்று ட்விட்டரில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டிருந்தார். அதில் மோடி அணியும் இந்திய உடையில் இருந்தார் மூன். மேலும், நான்கு நிறங்களில் சட்டையின் மேல் போடும் ஜாக்கெட்டுகளையும் அவர் பகிர்ந்திருந்தார். அத்துடன் அவர் பகிர்ந்த செய்தி தான் விவாதத்தின் தொடக்கப்புள்ளி. மூன்,  ``எனது இந்தியப் பயணத்தின்போது பிரதமர் மோடியின் ஆடை, அற்புதமாக இருப்பதாக அவரிடம் தெரிவித்திருந்தேன். அவர், அதேபோன்ற உடைகளை எனக்கு அனுப்பிருக்கிறார். அனைத்தும் எனக்கு மிகச் சரியாக பொருந்துகிறது. அவரின் இந்தப் பரிசுக்கு அவருக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். மோடி வெஸ்ட்( Modi Vest) என்று அழைக்கப்படும் இவை இந்திய பாரம்பர்ய ஆடைகளின் நவீன வெர்ஷன். கொரியாவில் இதை எளிதில் அணியும்படியாக உள்ளது” என்று பதிவிட்டிருந்தார். அவர் பதிவிட்டிருந்த புகைப்படத்தில் இருந்த ஆடையிலும், மோடி வெஸ்ட் (Modi Vest) என்று எழுதப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 

மோடி வெஸ்ட்

Photo Credit: Twitter/moonriver365

தென் கொரிய அதிபர் ட்வீட் செய்த சிறிது நேரத்தில் அதை ரீ ட்வீட் செய்த  ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லா,  ``எங்கள் பிரதமர் இதை அனுப்பியதை நினைத்து மகிழ்கிறேன். ஆனால் அவர், அதன் பெயரை மாற்றாமலே அனுப்பியிருக்கலாம். எனது வாழ்க்கையில் இதை நான் நேரு ஜாக்கெட் என்றே அறியப்பட்டேன். ஆனால், இப்போது அவை மோடி ஜாக்கெட்டாக மாற்றப்பட்டுள்ளது. இப்படி ஒன்று 2014 ஆண்டுக்கு முன்னாள் இந்தியாவில் இல்லை’ என்று பதிவிட்டார். 

ஒமர் அப்துல்லா

அதன் பின்னர் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் பலர் இது தொடர்பாக ட்வீட் செய்ய, இந்த விவாதம் சூடுபிடித்தது. காங்கிரஸின் திட்டங்களை பெயரை மாற்றி நிறைவேற்றுவதுபோல் இதையும் செய்திருக்கிறார் மோடி என விமர்சித்தனர். 

இந்த நிலையில், இந்த ஆடைகளைத் தயாரித்தது, சவுஹான் பிரதர்ஸின் ஜேட் ப்ளூ என்னும் நிறுவனம் என்றும், இதுபோன்ற ஆடைகளை அவர்கள் 1980-ம் ஆண்டு முதலே தயாரித்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், கடந்த சில ஆண்டுகளாக, இந்நிறுவனம் இந்த வகை உடையை மோடியின் பெயரில்தான் விற்பனை செய்து வருகிறதாம்.