சவுதி சகோதரிகளுக்கு என்னதான் நடந்தது? - துப்புக் கிடைக்காமல் திணறும் நியூயார்க் போலீஸ் | Newyork Police Investigate Mysterious Deaths of Saudi Sisters in New York River

வெளியிடப்பட்ட நேரம்: 18:20 (01/11/2018)

கடைசி தொடர்பு:18:20 (01/11/2018)

சவுதி சகோதரிகளுக்கு என்னதான் நடந்தது? - துப்புக் கிடைக்காமல் திணறும் நியூயார்க் போலீஸ்

ஹட்சன் நதியில் சவுதி சகோதரிகளின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டு ஒரு வாரம் கடந்த நிலையில், எப்படி அவர்கள் இறந்தார்கள் என்னும் துப்புக் கிடைக்காமல் நியூ யார்க் நகர காவல்துறை திண்டாடி வருகிறது.

சவுதி சகோதரிகள்
 

நியூயார்க்கில் மக்கள் அதிகம் வசிக்கும் பகுதி மன்ஹாட்டன். கடந்த அக்டோபர் 24-ம் தேதி மன்ஹாட்டனில் உள்ள ஹட்சன் நதிக்கரையில் இரண்டு இளம் பெண்களின் சடலம் கிடந்ததை பாதசாரி ஒருவர் பார்த்து போலீஸுக்குத் தகவல் கொடுத்தார். அவர்களின் இருவரின் கழுத்தும் ஒன்றாக டேப்பில் சுற்றப்பட்டிருந்தது. அவர்களின் இடுப்புப் பகுதியிலும் டேப் சுற்றி இரண்டு சடலங்களையும் ஒன்றாகக் கட்டிவைக்கப்பட்டிருந்தது. போலீஸ் விசாரணையில் அவர்கள் இருவரும் சவுதியைப் பூர்வீகமாகக் கொண்ட சகோதரிகள் என்பது தெரிய வந்தது.

நியூயார்க் போலீஸ் விசாரணை தகவல்கள்

22 வயது ரோடான் ஃபரியாவும் 16 வயது தாலா ஃபரியாவும் தன் குடும்பத்துடன் 2015-ம் ஆண்டு சவுதியிலிருந்து வர்ஜீனியாவுக்கு குடிபெயர்ந்தனர். அவர்கள் இருவரும் ஜார்ஜ் மேசன் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தனர். வர்ஜீனியாவில் ஃபேர்ஃபாக்ஸ் என்னும் இடத்தில் வசித்து வந்தனர். கடந்த ஆகஸ்ட் மாதம் இருவரும் காணாமல் போய்விட்டனர். இரண்டு மாதங்களுக்குப் பிறகு, மன்ஹாட்டனில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளனர்.  

சவுதி சகோதரிகள்

 

தாயின் வாக்குமூலம்

ஃபரியா சகோதரிகள் குறித்து அவர்களின் தாய் போலீஸில் அளித்த வாக்குமூலத்தில், `என் மகள்களைக் கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் காணவில்லை. அவர்களைத் தேடி அலைந்துகொண்டிருந்தேன். அவர்களின் சடலம் கண்டெடுக்கப்படுவதற்கு ஒருநாள் முன்னர்தான் சவுதி தூதரகத்திலிருந்து போன் அழைப்பு வந்தது. `உங்கள் மகள்கள் அமெரிக்காவுக்குத் தஞ்சம் புக விண்ணப்பித்திருந்தனர். அவர்களின் விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அவர்கள் அமெரிக்காவுக்குத் குடிபெயரலாம்’ என்று சவுதி தூதரக அதிகாரிகள் தெரிவித்தனர். அதற்கு மறுநாள் என் மகள்களின் சடலம் மட்டுமே எனக்குக் கிடைத்தது” என்று குறிப்பிட்டுள்ளார். 

நீடிக்கும் மர்மம்

வர்ஜீனியாவில் காணாமல் போன சகோதரிகள் நியூயார்க் எப்படி வந்தனர்? இவர்களின் சடலங்களை ஒன்றாகக் கட்டி ஜார்ஜ் வாஷிங்டன் பாலத்தில் இருந்து யார் வீசிச் சென்றது? என்பது போன்ற கேள்விகளுக்கு இன்று வரை விடை கிடைக்கவில்லை. நியூயார்க் நகர போலீஸோ ஃபரியா சகோதரிகளின் சடலங்கள் உடற்கூறாய்வுக்கு அனுப்பிவைப்பட்டுள்ளன. விரைவில் மர்மம் விலகும்’ என்று தெரிவித்துள்ளனர்.

சவுதி தூதரகம் வெளியிட்ட அறிக்கை

 

ஜமால் கொலைக்கும் இதற்கும் சம்பந்தமா?

அமெரிக்காவில் வசித்து வந்த சவுதி பத்திரிகையாளர் ஜமால் கஷோகிஜி துருக்கியில் அக்டோபர் 2-ம் தேதி சவுதி அதிகாரிகளால் படுகொலை செய்யப்பட்டார். ஒரு மாதம் ஆகியும் அவரின் சடலம் இன்னும்கூட கண்டுபிடிக்கப்படவில்லை. சவுதி அரசும் தெளிவான விளக்கத்தைக் கொடுக்கவில்லை. சவுதியிலிருந்து அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்தவர். ஃபரியா சகோதரிகளும் அப்படித்தான். எனவே, இவர்களின் மரணத்துக்கும் அரசியல் காரணங்கள் இருக்குமா என்கிற கோணத்தில் நியூயார்க் புலனாய்வு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சவுதி தூதரகமும் இந்த விவகாரத்தில் உண்மையைக் கண்டறிய ஒத்துழைப்போம் என்று உறுதியளித்துள்ளது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close