வெளியிடப்பட்ட நேரம்: 11:30 (02/11/2018)

கடைசி தொடர்பு:11:40 (02/11/2018)

13 பயணிகளின் இறப்புக்கு காரணமான சண்டை! - அதிர்ச்சி வீடியோ

சீனாவில் கடந்த 28-ம் தேதி பயணிகள் பேருந்து ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. தற்போது பேருந்து விபத்துக்கான காரணம் கொண்ட அதிர்ச்சி வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. 

விபத்து

தென் மேற்கு சீனாவின் சோங்குயிங் (Chongqing) மாகாணத்தில் உள்ள யங்ட்ஜீ (Yangtze) நதியில் கடந்த மாதம் 28-ம் தேதி ஒரு பயணிகள் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. பேருந்து ஓட்டுநர் உட்பட அதில் பயணித்த 13 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 

விபத்தை அடுத்து பேருந்தில் சிக்கிய பயணிகளின் உடல்களைத் தேடும் பணிகள் முடுக்கிவிடப்பட்டன. 6 மணி நேரமாக நடந்த தேடுதலுக்குப் பிறகு 65 மீட்டர் ஆழத்தில் பேருந்து இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் உயிரிழந்தவர்களில் இரண்டு பேரின் உடல்கள் மட்டுமே மீட்கப்பட்டன. மேலும், ஐம்பது தீயணைப்பு வீரர்கள், ஐந்து இயந்திரங்கள், இரண்டு மீட்புப் படகுகள் ஆகியவை உயிரிழந்தவர்களைத் தேடும் பணியில் ஈடுபடுத்தப்பட்டது. மூன்று நாள் இரவுபகலாக நடந்த தேடுதலுக்குப் பிறகு நேற்று பேருந்து நதியில் இருந்து வெளியில் எடுக்கப்பட்டது. 

முதலில், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்துதான் பாலத்தில் இருந்து நதியில் விழுந்ததாகக் கூறப்பட்டது. இருந்தும் விபத்துக்கான முழுமையான காரணம் என்ன என்பதைத் தெரியாமல் சோங்குயிங் காவல்துறையினர் திணறி வந்தனர். 

இந்த நிலையில், தற்போது தீவிர தேடுதலுக்குப் பிறகு விபத்துக்குக் காரணமாக அதிர்ச்சி வீடியோவை காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர். அதில் பயணி ஒருவர் ஓட்டுநரிடம் வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார். பிறகு இருவருக்கும் மோதல் ஏற்படவே அதில் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து நதியில் பாய்ந்துவிடுகிறது. இந்த வீடியோ வெளியாகி பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஒருவரின் தவற்றுக்காக 13 பேர் இறக்க நேரிட்டது என்று பலரும் சமூகவலைதளங்களில் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.