வெளியிடப்பட்ட நேரம்: 17:06 (02/11/2018)

கடைசி தொடர்பு:17:06 (02/11/2018)

`டப்பா' பாதுகாப்பு... இந்தோனேஷிய விமான நிறுவனங்களின் பகீர் நிலை!

பாதுகாப்பில், பராமரிப்பில் இந்தோனேஷிய விமான நிறுவனங்கள் அலட்சியம் காட்டுவதே விபத்துக்குக் காரணம்.

`டப்பா' பாதுகாப்பு... இந்தோனேஷிய விமான நிறுவனங்களின் பகீர் நிலை!

மீபத்தில் இந்தோனேஷியாவில் லயன் ஏர் விமானம் விபத்துக்குள்ளானதில் 189 பேர் மரணமடைந்தனர். இந்தியாவைச் சேர்ந்த அனுபவம் வாய்ந்த விமானி சுனேஜாவும் பலியானார். புத்தம் புதியதாக வாங்கப்பட்ட `போயிங் 737 மேக்ஸ்- 8’ ரக விமானம்தான் விபத்தில் சிக்கியது. இந்த விமானம் பயன்பாட்டுக்கு வந்து மூன்று மாதங்களே ஆகியிருந்தன. விபத்து நடந்த திங்கள் கிழமை காலை 6.20 மணிக்கு ஜகார்த்தா விமான நிலையத்திலிருந்து பங்கல் பினாங் (Pangkal Pinang) என்ற தீவுக்கு 7.20 மணிக்குப் புறப்பட்டது. காலநிலையும் நன்றாக இருந்துள்ள நிலையில் மேலெழும்பிய ஒரு சில நிமிடங்களில் மீண்டும் புறப்பட்ட இடத்துக்கே திரும்ப விமானி அனுமதி வேண்டியுள்ளார். அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், துரதிருஷ்டம் விடவில்லை. அடுத்த விநாடியே தரைகட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பை இழந்த விமானம், வானில் பறந்த 13-வது நிமிடத்தில் ஜாவா கடலில் விழுந்தது. 

லயன் விமானங்கள்

கடந்த ஆகஸ்ட் மாதத்தில்தான் லயன் விமான நிறுவனத்துக்கு `மேக்ஸ் -8’ ரக விமானம் வழங்கப்பட்டுள்ளது. 800 மணி நேரத்துக்கும் குறைவாகத்தான் பறந்துள்ளது. அப்படியிருந்தும் எப்படி விபத்து நிகழ்ந்தது என்று நிபுணர்கள் தலையைப் பிய்த்துக் கொண்டிருக்கிறார்கள். போயிங் ரக விமானங்களில் மேக்ஸ்-8 ரக விமானம்தான் தற்போது விற்பனையில் முன்னணியில் உள்ளது. போயிங் நிறுவனத்துக்கு இந்த ரக விமானங்கள் 1000 ஆர்டர்கள் கொடுக்கப்பட்டுள்ளன. 17 மாதத்துக்கு முன்தான் மேக்ஸ்-8 ரக விமானம் சந்தைக்கு விற்பனைக்கு வந்தது. இதுதான் முதல் விபத்தும் கூட. `கண்டறியப்படாத தொழில்நுட்பக் கோளாறு' விபத்துக்குக் காரணம் என்று லயன் ஏர் நிறுவனத் தலைவர் தெரிவித்துள்ளார். 

விமான விபத்துக்குப் பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. சர்வதேச விமான நிறுவனங்களில் இந்தோனேஷிய விமானங்கள் என்றாலே ஒரு அலர்ஜி உண்டு. பாதுகாப்பில் இந்தோனேஷிய விமான நிறுவனங்கள் அலட்சியம் காட்டுவதாக குற்றச்சாட்டும் இருக்கிறது. இதனால், ஐரோப்பிய நாடுகளுக்குள் இந்தோனேசியாவில் பதிவுசெய்யப்பட்ட விமானங்களுக்குத் தடை விதிக்கப்பட்டிருந்தது. அரசுக்குச் சொந்தமான `கருடா' விமான நிறுவனத்துக்கும் தடை இருந்தது. அமெரிக்காவிலும் இதே நிலைதான். அவ்வப்போது தடையைச் சந்திப்பதும் பின்னர் தடை நீக்கம் பெறுவதும் இந்தோனேஷிய நிறுவனங்களுக்கு வாடிக்கையே! லயன் ஏர் நிறுவனமும் தடையைச் சந்தித்த நிறுவனம்தான். விமானப் பராமரிப்புக்குக் கூட முறையாக ஊழியர்களை நியமிப்பதில்லை. ஊழியர்களுக்கு முறையான அறிவும் இல்லை என்று சொல்லப்படுகிறது.

இந்தோனேஷிய விமானங்கள்

இந்தோனேஷியா 13 ஆயிரம் தீவுகள் நிறைந்த நாடு. ஆண்டுக்கு 3 கோடி பேர் விமானத்தில் பயணிக்கின்றனர். இதற்காக 60 விமான நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. உலகிலேயே உள்நாட்டு விமானப் போக்குவரத்து அதிகம் கொண்ட நாடுகளில் இந்தோனேஷியாவுக்கு 5-வது இடம். இதில் லயன் ஏர் மட்டும் 51 சதவிகித உள்நாட்டுச் சந்தையைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது. பயணிகளை இழுக்க இவை போட்டி போடுகின்றன என்பதைத் தவிர பாதுகாப்பில் அக்கறை காட்டுவதில்லை. நம்ம ஊரில் டப்பா பேருந்து போல இந்தோனேஷியாவில் விமானங்கள் பறந்து கொண்டிருக்கின்றன என்பதே நிதர்சனம். 1997-ம் ஆண்டிலிருந்து தற்போது வரை 45 இந்தோனேஷிய விமானங்கள் விபத்துக்குள்ளாகி உள்ளன. இதில் 1997-ம் ஆண்டில் நடந்த அரசின் `கருடா' நிறுவனத்துககுச் சொந்தமான விமானம் கடலில் விழுந்ததில் அதிகபட்சமாக 234 பேர் உயிரிழந்தனர். இந்தோனேஷியாவில் நடந்த விமான விபத்தில் இதுதான் அதிக உயிர்களைப் பலி கொண்ட விபத்து. லயன் ஏர் விபத்து அதை தொடர்ந்து நடந்த பெரிய விபத்து.

இந்த விபத்தில் இந்தோனேஷிய நிதித்துறை அமைச்சக அதிகாரிகள் 20 உள்ளிட்ட 30 அரசு அதிகாரிகள், இரு குழந்தைகள் என மொத்தம் 189  உயிர்கள் பரிதாபமாகப் பறிபோயின. இனியாவது இந்தோனேஷிய அரசு மக்களின் உயிரோடு விளையாடும் விமான நிறுவனங்களுக்குக் கடிவாளம் போடுமா?

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்