வெளியிடப்பட்ட நேரம்: 20:20 (02/11/2018)

கடைசி தொடர்பு:20:20 (02/11/2018)

"பாலியல் புகார் அளித்தேன்; அவருக்குப் பதவி உயர்வு!” - கொதிக்கும் கூகுள் ஊழியர்கள்!

கூகுள்

பிரபல தொழில்நுட்ப நிறுவனமான கூகுள், கடந்த வாரம் முதலே பணியிடத்தில் பாலியல் புகார்களைக் கையாளும் விவகாரத்தில் பெரும் சவாலைச் சந்தித்துவருகிறது என்றுதான் கூறவேண்டும். கடந்த வாரம், ‘தி நியூயார்க் டைம்ஸ்’ பத்திரிகை வெளியிட்ட ஒரு கட்டுரையில், பாலியல் புகார் சுமத்தப்பட்டவர்களைப் பல மில்லியன் டாலர்கள் கொடுத்து கூகுள் நிறுவனம் வீட்டுக்கு அனுப்பிவைத்ததாகவும், அவர்கள் மீது சுமத்தப்பட்ட புகார்கள்மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. அதை மறுத்த கூகுள் நிறுவனம், கடந்த இரண்டு வருடங்களில் கிட்டத்தட்ட  48 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்ததாகவும்,  அவர்கள் யாருக்கும் எந்தத் தொகையும் அளிக்கவில்லை  என்றும் தெரிவித்தது. மேலும், இதற்காகத் தன் ஊழியர்களிடம் இரண்டுமுறை மன்னிப்பும் கோரியது. இந்தக் குற்றச்சாட்டைச் சரிசெய்ய அதன் தலைவர் சுந்தர் பிச்சை மற்றும் துணை நிறுவனர் லாரே பேஜும் இணைந்து , தங்களின்  94,000 ஊழியர்களைப் பல்வேறு வகையில் சமாதானப்படுத்த எடுத்த முயற்சியும் பலன் இல்லாமல்போனது.  

கூகுள்

இந்நிலையில், நேற்று  (வியாழக்கிழமை) கூகுள் நிறுவனத்தின் உலகம் முழுவதும் உள்ள பல்வேறு கிளைகளின் ஊழியர்கள், தங்களின் அலுவலகம் முன், அந்நிறுவனம் பாலியல் புகார்களைச் சரிவர எதிர்கொள்ளவில்லை என்று கூறி போராட்டம் நடத்தினர் . “எதிர்த்து நில்! போராடு!”, “நான் பாலியல் புகார் அளித்தேன்; அவருக்குப் பதவி உயர்வு கிடைத்தது!” என்பன போன்ற பதாகைகளைச் சுமந்துகொண்டு எண்ணற்ற  ஊழியர்கள் போராட்டத்தில் கலந்துகொண்டனர் . நியூயார்க், சிங்கப்பூர், இந்தியாவில் ஹைதராபாத், லண்டன், பெர்லின், சிகாகோ உள்ளிட்ட பல  இடங்களில், பாலியல் தொல்லைகளுக்கு எதிராக நடந்த இந்தப் போராட்டம் பெருநிறுவனங்களைத் திரும்பிப்பார்க்கச் செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க