வெளியிடப்பட்ட நேரம்: 20:08 (02/11/2018)

கடைசி தொடர்பு:20:08 (02/11/2018)

தொடரும் அரசியல் குழப்பம் - நவம்பர் 7-ல் மீண்டும் கூடுகிறது இலங்கை நாடாளுமன்றம்!

இலங்கை

எதிர்க்கட்சிகள் மற்றும் சர்வதேச அழுத்தத்தை அடுத்து இலங்கை நாடாளுமன்றத்தை வரும் 7-ம் தேதி மீண்டும் கூட்டுவதற்கு அதிபர் மைத்திரிபால சிறிசேன அனுமதி அளித்துள்ளார். 

இலங்கை நாடாளுமன்றத்தின் அவைத்தலைவர் கரு.ஜயசூர்யா தலைமையில், எதிர்க்கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, சிங்கள இனவாத இடதுசாரி கட்சியான ஜேவிபி, ஐக்கிய தேசியக் கட்சி ஆகிய கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் இன்று காலை நடைபெற்றது. நாடாளுமன்றத்தை முடக்கி அதிபர் சிறிசேன பிறப்பித்த உத்தரவை எதிர்த்தும் 5-ம் தேதியன்று நாடாளுமன்றத்தைக் கூட்ட வேண்டும் என்றும் இவர்கள் வலியுறுத்தினர். மொத்தமுள்ள 225 இடங்களில், ஆட்சியைத் தக்கவைப்பதற்கான 113 இடங்களைப் பெற வேண்டும் எனும் நிலையில், ஜயசூர்யா கூட்டிய கூட்டத்தில் 118 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். 

`மகிந்த ராஜபக்சேவை அரசமைப்புக்கு விரோதமாகப் பிரதமர் பதவியில் அதிபர் மைத்திரி நியமித்துள்ளதை எதிர்க்கிறோம்’ என்று அவர்கள் அனைவரும் கையெழுத்திட்ட மனு ஒன்றையும் ஜயசூர்யாவிடம் சமர்ப்பித்தனர். அதைப் பெற்றுக்கொண்ட நாடாளுமன்ற அவைத்தலைவர் கரு.ஜயசூர்யா, வரும் 7-ம் தேதியன்று நாடாளுமன்றத்தைக் கூட்ட மைத்திரிபால சிறிசேன இசைந்துள்ளதாகத் தெரிவித்தார். இதற்கிடையில், ரணிலின் ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் பாலித ரங்கே பண்டார இன்று காலை கொழும்புவில் அளித்த பேட்டியில், `கட்சியைவிட்டு வந்தால் அமைச்சர் பதவியும் 2.8 மில்லியன் அமெரிக்க டாலர் பணமும் தனக்கு மகிந்த ராஜபக்சே தரப்பு பேரம்பேசினர்’ என்று கூறினார்.