கடலில் மாயமான தீவு - கலக்கத்தில் ஜப்பான் | In japan, a small island was disappeared and search operations where on

வெளியிடப்பட்ட நேரம்: 07:41 (03/11/2018)

கடைசி தொடர்பு:07:41 (03/11/2018)

கடலில் மாயமான தீவு - கலக்கத்தில் ஜப்பான்

ஜப்பான் நூற்றுக்கணக்கான சிறிய தீவுகளைக் கொண்ட நாடு அந்நாட்டின் வடக்கு கடற்கரை பகுதியில், சிறிய அளவில் மக்கள் வசிக்கும் கடற்கரை கிராமம்தான் ஹோக்கைடூ. ஹோக்கைடூவும் ஒரு தீவு தான். இங்கு இருந்து கண்ணுக்கெட்டிய தூரத்தில் உள்ளது மற்றொரு குட்டித் தீவு. தங்களின்  கண்களில் தினமும் படும் இந்தக் குட்டித் தீவு கடந்த சில நாள்களாகக் காணவில்லை என்கின்றனர் அந்த ஹோக்கைடூ வாசிகள். 

ஜப்பான்

Photo Credit: REUTERS

திடீரென மாயமான இந்த தீவின் பெயர்  `எஸன்பே ஹனகிடா கொஜிமா’. மனிதர்கள் வாழாத குட்டித் தீவு. இந்தத் தீவை ஜப்பான் கடற்படையினர் 1987-ம் ஆண்டு கண்டுபிடித்து தங்கள் நாட்டுடன் இணைத்துக்கொண்டனர். எனினும் 2014 -ம் ஆண்டுதான் இதற்கு ஜப்பான் அரசு  `எஸன்பே’ என்ற பெயரை சூட்டியது. தனது கடல் எல்லைகளை வரையறுத்துக்கொள்ளும் பணியின்போது, ஜப்பான் அரசு மனிதர்கள் வாழாத சுமார் 158 தீவுகளுடன் இந்தத் தீவையும் சேர்த்துக்கொண்டது. சிறிய தீவான இது கடல் மட்டத்திலிருந்து சுமார் 4 அடி வரையில் தான் வெளியே தெரியும். இதை முதல் முறையாக ஜப்பான் கடற்படை கண்டுபிடிக்கும்போது கடலில் இருந்து ஒரு அடி உயரத்தில்தான் இருந்தது. 

இந்தத் தீவைத்தான் கடந்த சில நாள்களாகக் காணவில்லை. இது தொடர்பாக கடற்படைக்கு மக்கள் தகவல் தெரிவித்தனர். இது காலநிலை மாற்றத்தினாலோ, அல்லது பனிக்கட்டிகளுடனோ சென்றிருக்கலாம் என்று யூகங்கள் எழுந்தாலும், உண்மையில் அந்தத் தீவுக்கு என்ன ஆனது என்று யாருக்கும் தெரியவில்லை. இந்த நிலையில் ஜப்பான் கடற்படை, காணாமல்போன தீவை தேடும் பணிகளில் இறங்கவுள்ளது. 

காணாமல் போனது குட்டித் தீவு, மனிதர்கள் கூட வசிக்காத பகுதி. தண்ணீரில் மூழ்கியிருக்கும். இதற்குத் தேடுதல் வேட்டை தேவையா எனப் பலர் கேள்விஎழுப்ப, இது நாட்டின் எல்லை சம்பந்தப்பட்டது என்ற விடையும் கிடைத்தது. ஆம், ஹோக்கைடூ தீவின் கிழக்குப் பகுதியில் ரஷ்ய நாட்டின் தீவுகள் இருக்கின்றன. சர்வதேச விதிகளின்படி, நிலங்களின் அடிப்படையில் தான் நீர்ப்பரப்பையும் சொந்தம் கொண்டாட முடியும். அந்த நிலப்பரப்பு நீர் மட்டத்தின் மேல் இருக்க வேண்டும்.  எஸன்பே தீவு, ஹோக்கைடூவில் இருந்து சுமார் 1.600 அடி தூரத்தில் உள்ளது. தற்போது  எஸன்பே தீவு காணாமல் போனதால், ஜப்பான் நாட்டுக்குச் சொந்தமான கடற்பரப்பு சுமார் 500 மீட்டர் குறையும் வாய்ப்புள்ளது. 

ஜப்பான் நாட்டில் நிலநடுக்கம் மற்றும் எரிமலை சீற்றம் போன்ற காலத்தில், சில சிறிய தீவுகள் காணாமல் போவதும், பல புதிய தீவுகள் புதிதாய் வருவதுமாய் இருப்பது சாதாரணமாக நடப்பதுதான். எனினும் இது நாட்டின் எல்லை சம்பந்தப்பட்டதால், காணாமல் போன தீவு குறித்த ஆய்வில் இறங்கியிருக்கிறார்கள். ஜப்பான் நாடு சிறிய சிறிய தீவுகளுக்கு அதிக முக்கியத்துவம் தரும் நாடு. மனிதர்கள் வாழா தீவின் மீதும், அதைக் காப்பதிலும் அந்நாட்டு அரசு எப்போதும் அதிக கவனம் செலுத்தும். அதன் காரணமாகதான் இந்த தேடுதல் நடவடிக்கை என்கிறார்கள். 


[X] Close

[X] Close