வெளியிடப்பட்ட நேரம்: 18:13 (03/11/2018)

கடைசி தொடர்பு:18:13 (03/11/2018)

ராஜபக்சே எதிர்ப்புத் தீர்மானத்துக்கு ஆதரவு - தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவிப்பு!

இலங்கை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

இலங்கையில் அதிபர் மைத்திரிபால சிறிசேனவால் பிரதமராக நியமிக்கப்பட்ட மகிந்த ராஜபக்சேவுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்துக்கு ஆதரவு அளிக்கப்படும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. 

நேற்று நடைபெற்ற கூட்டமைப்புக் கட்சிகளின் தலைவர்கள் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக, கூட்டமைப்பு இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர் ரணில் விக்கிரமசிங்கும் அதிபர் மைத்திரிபால சிறிசேனவால் சர்ச்சைக்குரியவகையில் நியமிக்கப்பட்ட மகிந்த ராஜபக்சவும் கூட்டமைப்பின் ஆதரவைக் கேட்டு, தொடர்ச்சியாகப் பேசிவந்தனர். இரு தரப்பிடமும் ஐ.நா தீர்மானம், அரசியலமைப்புமாற்றம் ஆகிய நிபந்தனைகளைக் கூட்டமைப்பு முன்வைத்தது. பிடிகொடுக்காமல் கூட்டமைப்பு நழுவியநிலையில், நேற்று மாலையில் கூட்டமைப்பைச் சேர்ந்த ஒருவரை மகிந்த ராஜபக்சே தரப்பு அமைச்சராக்கி, தங்கள் பக்கம் இழுத்துக்கொண்டது. 

இந்நிலையில், கூட்டமைப்பின் தலைவர்கள் கூட்டம் நேற்று மாலையில் கூடி, இது குறித்து முடிவெடுத்தது. கூட்டத்தின் முடிவில், ``நாடாளுமன்ற அமர்வுகளை நிறுத்தியதாக அதிபர் மைத்திரி வெளியிட்ட பிரகடனமானது, ஜனநாயக விரோதச் செயலாகும். நாடாளுமன்றத்தின் மீயுயர் தன்மையைப் பாதிக்கின்ற செயலும் ஆகும். நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் இல்லாத ஒருவரை பிரதமராக அறிவித்துவிட்டு, அவர் பெரும்பான்மையை நிரூபிப்பதை தாமதம் செய்ய வசதியாகக் காலநீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இதைப் பயன்படுத்தி அமைச்சர் பதவிகளையும் பணத்தையும் லஞ்சமாகக் கொடுத்து நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தம் பக்கத்துக்கு முறைகேடாக இழுத்தெடுத்து பெரும்பான்மையைக் கபடமாகப் பெற முயல்கின்றனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இதை வன்மையாகக் கண்டிக்கிறது; எதிர்க்கிறது. கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரனும் இந்த சதி முயற்சிக்கு பலியானதை குறித்து எமது கடுமையான கண்டனத்தையும் எதிர்ப்பையும் வெளியிடுகிறோம். அவருக்கு எதிரான உரிய நடவடிக்கை உடனடியாக எடுக்கப்படும்” என்று கூட்டமைப்பின் தலைவர்கள் தெரிவித்துள்ளனர். 

மேலும், ``அரசியலமைப்பை முற்றிலும் மீறுவதாகவும் சட்டவிரோதமாகவும் பிரதமராக நியமிக்கப்பட்டிருக்கும் மகிந்த ராஜபக்ச தலைமையிலான அரசாங்கத்துக்கு எதிராகக் கொண்டுவரப்படும் நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு ஆதரவாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வாக்களிக்கும் இத்தகைய சந்தர்ப்பத்தில் ’நடுநிலை’ வகிப்பது என்பது அராஜகம் வெற்றியீட்டுவதற்கு வழிவகுக்கக்கூடிய ஜனநாயகவிரோதச் செயல் என்பதே எமது நிலைப்பாடு” என்று கூட்டமைப்பின் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.