வெளியிடப்பட்ட நேரம்: 01:30 (04/11/2018)

கடைசி தொடர்பு:01:30 (04/11/2018)

``முதன் முதலில் கலர் முட்டைகளை இட்டது பறவைகள் அல்ல” -சுவாரஸ்ய ஆய்வு முடிவு

 கலர் முட்டை

கோழி, காகம், குயில், வாத்து என பல்வேறு பறவைகளின் முட்டைகள் எல்லாம் வெள்ளை நிறத்தில் மட்டுமே இருப்பதில்லை. பல்வேறு வண்ணங்களில் காணப்படுகின்றன. ஆமை, முதலைகள் போன்ற சில ஊர்வனவற்றின் முட்டைகள் மட்டுமே பெரும்பான்மையாக வெள்ளை நிறத்துடன் காணப்படுகின்றன. அவற்றின் முட்டை ஓடுகள் மிகவும் மென்மையானவை. முட்டையிடும் உயிரிகளிலேயே பறவைகள்தான் முதன்முதலில் கலர் கலர் முட்டைகளை இட்டவை என்ற கருத்தை பொய்யாக்கியிருக்கிறது புதிய ஆய்வு. முதன்முதலில் வண்ண முட்டைகளை இட்டவை டைனோசர்கள். பறவைகளின் முன்னோடிகளான டைனோசர்கள்தான் வண்ண முட்டைகளை இட்டுள்ளதாக தற்போதைய ஆய்வில் தெரியவந்துள்ளது. ஐரோப்பா, ஆசியா, வட அமெரிக்கா, தென் அமெரிக்கா போன்ற கண்டங்களில் இருந்து கிடைக்கப் பெற்ற 12 டைனோசர் முட்டை ஓடுகளின் படிமங்களை ஆய்வுக்குட்படுத்தியதில் அவற்றில் நிறமிகளுக்கான கூறுகளைக் கொண்டிருப்பது தெரியவந்துள்ளது. 

டைனோசர்

பறவைகள் மட்டுமே வண்ண முட்டிகளையிடும் பண்பைப் பெறவில்லை என்பது இந்த ஆய்வின் மூலம் உறுதியாகியுள்ளது. மேலும் பறவைகள் கலர் கலராக முட்டையிடுவதுகூட டைனோசர்களிடமிருந்தே பரிணாம வளர்ச்சியாக உருவாகியிருக்கிறது என்கிறார் யேல் பல்கலைக்கழகத்தின் தொல்லுயிரியலாளரான ஜாஸ்மினா வீய்மான். மேலும் அவை நீலம், பிரவுன், புள்ளிகளுடைய  முட்டையிட்டு இருக்கின்றன. பறவைகள் டைனோசர்களின் ஒரு பிரிவான eumaniraptoran டைனோசரிலிருந்தே பரிணாம வளர்ச்சி அடைந்துள்ளன. ஜுராசிக் டைனோசர் காலத்தில் இது நிகழ்ந்துள்ளது. ஆரம்பக்காலத்தில் பரிணாம வளர்ச்சியடைந்த பறவையாக Archaeopteryx இருந்துள்ளது. 150 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே இந்த பறவை உருவாகியுள்ளது.