நவம்பர் 14-ல் இலங்கை நாடாளுமன்றம் கூடும்! - மைத்திரிபால சிறிசேனா உத்தரவு | SL President summons parliament to meet on Nov.14

வெளியிடப்பட்ட நேரம்: 12:20 (05/11/2018)

கடைசி தொடர்பு:12:29 (05/11/2018)

நவம்பர் 14-ல் இலங்கை நாடாளுமன்றம் கூடும்! - மைத்திரிபால சிறிசேனா உத்தரவு

இலங்கை மைத்திரிபால சிறிசேன

இலங்கை நாடாளுமன்றத்தை வரும் 14-ம் தேதியன்று கூட்டுவதற்கு, அந்நாட்டு அதிபர் மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார். நாடாளுமன்றக் கூட்டம் தொடர்பாக, ஊடகங்களின் செய்திகளும் வதந்திகளும் இதனால் முடிவுக்கு வந்துள்ளன. 

கடந்த மாதம் 26-ம் தேதியன்று நாடாளுமன்றக் கூட்டம் முடிந்ததைத் தொடர்ந்து, முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவை பிரதமராக நியமித்து, அதிபர் மைத்திரி பதவிப்பிரமாணம் செய்துவைத்தார். அதற்கு, உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. நாடாளுமன்றத்தை உடனடியாகக் கூட்ட வேண்டும் என ஐநா அவையின் பொதுச்செயலாளர் வரை பல்வேறு சர்வதேசத் தலைவர்களும் அழுத்தம் தந்தனர். 

அதிபரின் தரப்பில் மௌனமாகவே இருந்ததால், எதிர்க்கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம், கடந்த சனியன்று நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் நடத்தப்பட்டது. அதில் பேசிய இலங்கை நாடாளுமன்ற அவைத்தலைவர் கரு ஜயசூர்ய, 7-ம் தேதியன்று நாடாளுமன்றத்தைக் கூட்ட அதிபர் ஒப்புதல் அளித்துள்ளார்;  அன்று மாலை அரசிதழில் அறிவிப்பு வெளியாகும் என்று கூறினார். ஆனால், அப்படியான அறிவிப்பு ஏதும் வெளியிடப்படவில்லை. 

நேற்று மாலை, திடீரென இலங்கை அரசிதழில் வெளியிடப்பட்ட அறிவிப்பில், ”வரும் 14-ம் தேதியன்று காலை 10 மணிக்கு நாடாளுமன்றத்தைக் கூட்ட, அரசமைப்பின் 70-வது பிரிவு உட்பிரிவு (3) (அ) -வின்படி அதிபர் மைத்திரிபால சிறிசேனா உத்தரவு பிறப்பித்துள்ளார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.