வெளியிடப்பட்ட நேரம்: 20:00 (05/11/2018)

கடைசி தொடர்பு:20:00 (05/11/2018)

20 ஆண்டுகளில் சுனாமி பாதிப்பால் 280 பில்லியின் டாலர் இழப்பு - ஐ.நா

சுனாமி

கடந்த 20 வருடங்களில் சுனாமி பாதிப்பால் 280 பில்லியின் டாலர்கள் இழப்பு ஏற்பட்டுள்ளதாகப் பேரழிவு ஆபத்துக் குறைப்புக்கான ஐ.நா அலுவலகம் தெரிவித்துள்ளது. மிக முக்கியமாகப் பசிபிக் பெருங்கடல், இந்தியப் பெருங்கடல் எல்லைகளுக்குட்பட்ட நாடுகளில் மட்டுமே இவ்வளவு பெரிய பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது.  1998-ம் ஆண்டிலிருந்து 2017-ம் ஆண்டுவரை ஏற்பட்ட சுனாமிகளின் பாதிப்புகளின் தரவுகளிலிருந்து இந்த இழப்பைக் கணக்கிட்டுள்ளனர். இந்த காலகட்டத்தில் 2,51,770 பேர் நேரடியாகச் சுனாமியால் இறந்துள்ளனர். ஆண்டுதோறும் நவம்பர் 5-ம் தேதியை சுனாமி விழிப்பு உணர்வு நாளாகக் கடைப்பிடித்து வருகின்றனர்.

இந்த நாளைக் கணக்கில் கொண்டே கடந்த வெள்ளிக்கிழமை இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது ஐ.நா சபை பொதுச்செயலாளரின் பேரழிவு ஆபத்து குறைப்புக்கான சிறப்பு பிரதிநிதி கூறுகையில், ``சுனாமி விழிப்பு உணர்வு தினத்தில் சுனாமி குறித்த விழிப்புஉணர்வைப் பரவலான மக்களுக்கு ஏற்படுத்த வேண்டும். இந்த வருடம் சுனாமியால் நமக்கு ஏற்பட்ட பொருளாதார இழப்புகளைக் கவனப்படுத்தியுள்ளோம். இனிவரும் காலங்களில் சுனாமி வருவதை முன்கூட்டியே கணிப்பதோ தடுப்பதோ எவ்வளவு சாத்தியம் எனத் தெரியவில்லை. ஆனால், சுனாமியிலிருந்து நம்மைத் தற்காத்துக்கொள்ள முடியும். சுனாமியால் பாதிக்கப்படக்கூடிய வாய்ப்பிருக்கும் நகரங்களில் அடர் மக்கள்தொகையையும் உள்கட்டமைப்பு வசதிகளையும் திறம்பட கையாண்டாலே போதுமானது'' என்றார். மேலும், தற்போது இந்தோனேசியாவில் ஏற்பட்டிருக்கும் சுனாமி பாதிப்பிலிருந்து அந்த நாடு மீண்டு வருவதற்கு உதவி செய்வோம் என்று கோரிக்கை விடுத்துள்ளார். 

கடந்த 20 ஆண்டுகளில் ஏற்பட்ட சுனாமிகளிலேயே மிக மோசமானது 2004-ம் ஆண்டு இந்தியப் பெருங்கடலில் ஏற்பட்ட சுனாமி. மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. அதன்பின் கொடுமையானது 2011-ம் ஆண்டு ஜப்பானில் ஏற்பட்ட சுனாமி ஃபுகுஷிமா அணு உலை நிலைகுலைய வைத்தது. அந்தப் பேரழிவுக்கான விளைவாக இன்றுவரை அணுக்கதிர்வீச்சு பலரையும் கொன்று வருகிறது.