வெளியிடப்பட்ட நேரம்: 21:33 (05/11/2018)

கடைசி தொடர்பு:21:38 (05/11/2018)

நீருக்கடியில் ஒரு `வாவ்’ அனுபவம் - உலகின் முதல் அண்டர்வாட்டர் வில்லா!

மாலத்தீவு அருகே கடலுக்கு அடியில் ஒரு வில்லா அமைக்கப்பட்டுள்ளது. காண்போரை கவரும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இந்த வில்லாவில் ஒருநாள் இரவு தங்குவதற்கான வாடகை மட்டும் ரூ.36.67 லட்சமாம். 

வில்லா

தண்ணீரால் போர்த்தப்பட்ட கண்ணாடிக்குடுவை, எந்நேரமும் சுற்றி வட்டமடிக்கும் மீன்கள், கடல்வாழ் உயிரினங்கள், கடல்பாசி, பவளப்பாறைகள் இப்படியாய் அமைக்கப்பட்ட ஓர் அறையில் தங்கச்சொன்னால் யார் தான் மறுப்பார்கள். அப்படித்தான் அமைந்துள்ளது அந்த வில்லா. காண்போரை மதி மயங்கச்செய்யும் இந்த வில்லா மாலத்தீவில் அமைந்துள்ளது. கடலுக்கு அடியில் உருவாக்கப்பட்ட உலகின் முதல் வில்லா இதுதான். இந்தியப்பெருங்கடலின் 16 அடிக்கு கீழே, கற்பனைக்கு எட்டா இடத்தில் இருக்கும் அந்த வில்லாவின் பெயர் `முராகா'. திவிஹி மொழியில் பெயரிடப்பட்ட இதற்கு `பவளம்' என்று பொருள். தங்குவதற்கான அறைகள் மட்டுமின்றி, ஜிம், பார், நீளமான நீச்சல் குளம் என பல்வேறு வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது.

வில்லா

 

அந்த வில்லாவின் மேல்தளமானது நீருக்கு மேலே இருப்பதுபோல் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த வில்லாவில் ஓர் இரவு தங்க இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.36.67 லட்சம் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேபோல், இந்த வில்லாவில் தங்குவதற்கு குறைந்தபட்சம் 4 நாள்கள் நீங்கள் புக் செய்ய வேண்டி இருக்கும். அதேபோல், பேக்கேஜ் முறையில் ஒருவர் 1.46 கோடி ரூபாய் கட்டணம் செலுத்தினால், அவருக்கென தனி செஃப் மற்றும் தனி போட் கொடுக்கப்படும். இந்தியப் பெருங்கடலில் 16 அடி அளவுக்கு மூழ்கி இருக்கும் இந்த வில்லா, நீருக்கடியில் அமைக்கப்பட்டுள்ள முதல் வில்லா என்கிறார்கள். இருப்பினும் நீருக்கடியில் அமைக்கப்பட்டுள்ள தங்கும்விடுதி என்று பார்த்தால் இது முதலாவது அல்ல. மாலத்தீவுப் பகுதியிலேயே `இதா' என்னும் ஃபைவ் ஸ்டார் ரெஸ்ட்டாரன்ட் நீருக்கடியில் அமைக்கப்பட்டிருந்தது.

சிங்கப்பூரில் கட்டுமானப் பணிகள் நிறைவுபெற்ற பின்னர், சிறப்புக் கப்பல் ஒன்றின் மூலம் மாலத்தீவுக்கு இந்த வில்லா கொண்டுவரப்பட்டது. பின்னர், வில்லாவின் குறிப்பிட்ட பகுதிகள் மட்டும் நீரில் மூழ்கடிக்கப்பட்டு கான்க்ரீட் தூண்கள் உதவியுடன் நிலைநிறுத்தப்பட்டிருக்கிறது. கடல்வாழ் உயிரினங்களின் சுற்றுச்சூழலைப் பாதிக்காவண்ணம் இந்த வில்லா கட்டமைக்கப்பட்டுள்ளது என்கிறார்கள் அந்த வில்லாவின் உரிமையாளர்கள்.