வெளியிடப்பட்ட நேரம்: 09:30 (06/11/2018)

கடைசி தொடர்பு:09:42 (07/11/2018)

‘லயன் ஏர் விமானம் குறித்த அதிர்ச்சித்தகவல்’ - 4 விமான விபத்துக்கும் ஒரே காரணமா?

லயன் ஏர் நிறுவனத்தின் மோசமான பராமரிப்பு மற்றும் நிர்வாகத்தின் காரணமாக அந்த நிறுவன விமானங்கள் ஐரோப்பிய வான்வெளியில் பறக்க 2016-ல் தடை விதிக்கப்பட்டுள்ளது.

 

லயன் ஏர் விமானம்

இந்தோனேசியா தலைநகர் ஜகார்த்தாவில் இருந்து பங்கள் தீவு நோக்கிக் கடந்த அக்டோபர் 29-ம் தேதி ஜெடி-610 என்ற விமானம் புறப்பட்டது. போயிங் 737 மேக்ஸ் 8 வகையைச் சேர்ந்த இந்த விமானம் காலை 6:20 ஜகார்த்தாவிலிருந்து புறப்பட்டது. 7:20 மணிக்கு பங்கல் தீவைச் சென்றடைந்து இருக்க வேண்டும். ஆனால், விமானம் புறப்பட்ட 13-வது நிமிடத்தில் கட்டுப்பாட்டு அறைக்கும் விமானத்துக்கும் இடையேயான தொடர்பு துண்டிக்கப்பட்டது. இதையடுத்து விமானத்தைத் தேடும் பணியில் விமான நிலைய அதிகாரிகள் ஈடுபட்டனர். ஜாவா கடலில் விமானம் விபத்துக்குள்ளானது தெரியவந்தது. விமானத்தில் பயணித்த 189 பேர்களின் நிலை என்னவென்று தெரியாமல் இருந்தது. இதையடுத்து கடற்படை அதிகாரிகள், நீர்மூழ்கி வீரர்கள் அப்பகுதிக்கு விரைந்தனர். விமானம் கடலில் விழுந்ததால் அதில் பயணித்த 189 பேரும் உயிரிழந்து விட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. 

இதையடுத்து விபத்தில் உயிரிழந்தவர்களின் உடலைத் தேடும் பணியில் ஈடுபட்டனர். இதற்கிடையில் விமானம் எதனால் விபத்துக்குள்ளானது. இயந்திரக்கோளாறு அல்லது மனிதத் தவறா என்பது தெரியாமல் அதிகாரிகள் குழம்பிப்போயிருந்தனர். விபத்துக்குள்ளான விமானம் லயன் ஏர் நிறுவனத்துக்குச் சொந்தமானது. விமானியும், துணை விமானியும் வானில் நீண்ட நேரம்  விமானத்தை இயக்கிய அனுபவம் கொண்டவர்கள். 

விமானம், விபத்துக்குள்ளானதற்கு முந்தையநாள் இரவு பலி தீவிலிருந்து ஜகார்த்தாவுக்கு வந்தது. அப்போது விமானத்தில் சிறு பழுது இருந்ததாகவும். விமானநிலையம் வந்து இறங்கியவுடன் பொறியாளர்கள் பழுதைக் கண்டுபிடித்து சரிசெய்துவிட்டதாக லயன் ஏர் சி.இ.ஓ எட்வர்டு சிரைட் தெரிவித்தார். 

விமானத்தின் கறுப்புப்பெட்டி கண்டெடுக்கப்பட்டால் தான் விபத்துக்கான முழுக்காரணமும் தெரியவரும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து விமானத்தில் கறுப்புப்பெட்டியைத் தேடும் பணியில் நீர்மூழ்கி வீரர்கள் ஈடுபட்டனர். நவம்பர் 1-ம் தேதியன்று கறுப்புப்பெட்டி கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால், அந்தப்பெட்டியில் இருக்கும் பிங்க் என்ற இயந்திரம் காணாமல் போனதால் விபத்துக்கான காரணத்தைக் கண்டறியமுடியாமல் அதிகாரிகள் திணறிவந்தனர்.

இந்த நிலையில், கறுப்புப்பெட்டியில் பதிவான தகவலில், விமான விபத்துக்குள்ளாவதற்கு ஏர் ஸ்பீட் இண்டிகேட்டர் பழுதாகியுள்ளது தெரியவந்துள்ளது. இதில் அதிர்ச்சிகரமான தகவல் என்னவென்றால் விபத்துக்குள்ளான 4 போயிங் ரக விமானத்தில் இந்தக்கோளாறு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் விபத்துக்கான காரணங்கள் இன்னமும் முழுமையாகத் தெரியவில்லை. விபத்து குறித்துப் பேசிய லயன் ஏர் சி.இ.ஓ எட்வர்டு சிரைட் பழுது இருந்தது உண்மைதான் அவை பொறியாளர்களின் உதவியுடன் சரிசெய்யப்பட்டது. விமானம் பறக்கலாம் என்ற அனுமதி வாங்கிய பிறகு புறப்பட்டது எனத் தெரிவித்திருந்தார். மோசமான நிர்வாகம் மற்றும் பராமரிப்பின் காரணமாக லயன் ஏர் விமானம் ஐரோப்பிய வான் வெளியில் பறப்பதற்கு 2016-ல் தடைவிதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதுதொடர்பாக விசாரணை அதிகாரிகள் கூறுகையில், ``தேசிய போக்குவரத்து பாதுகாப்பு ஆணையம் மற்றும் போயிங் நிறுவனத்திடம் இதுகுறித்து பேசியுள்ளோம். இனி வரும் காலங்களில் விபத்துகளைத் தவிர்ப்பதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு தெரிவித்துள்ளோம்'' என்றனர். இதற்கிடையில் நாட்டின் உள்ள அனைத்து 737 மேக்ஸ் ரக விமானங்களின் பாதுகாப்பை உறுதிசெய்யுமாறு இந்தோனேசிய அரசு உத்தரவிட்டுள்ளது.