வெளியிடப்பட்ட நேரம்: 12:05 (06/11/2018)

கடைசி தொடர்பு:09:36 (07/11/2018)

ஆப்கான் மருத்துவமனையில் 12 குழந்தைகள் உயிரிழந்த சோகம்

ஆப்கானிஸ்தான் மருத்துவமனையில் பிறந்து சில நாள்களே ஆன 12 குழந்தைகள் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆப்கானிஸ்தான்


ஆப்கானிஸ்தானின் வடகிழக்கு மாகாணமான பன்ஷீர் பகுதியில் உள்ள சுகாதார மையத்தில் பிறந்த சில நாள்களே ஆன 12 குழந்தைகள் உயிரிழந்துள்ளது. மேலும், இரண்டு குழந்தைகள் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். குழந்தைகளுக்கு திடீரென ஏதோ பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆனால், சிகிச்சை பலனின்றி 12 குழந்தைகளும் இறந்துள்ளன. 12 குழந்தைகளுக்கும் ஒரே விதமான நோய்த் தொற்று அறிகுறி இருந்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்த தகவல் உடனடியாக சுகாதாரத்துறை அதிகாரிகளுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தலைநகர் காபூலில் உள்ள தனியார் ஆய்வகத்தில் இதுதொடர்பாக பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 12 குழந்தைகளின் இறப்பு குறித்த காரணம் தெரியாமல் மருத்துவர்கள் குழம்பி வருகின்றனர். சுகாதார மையத்தில் குழந்தைகள் இறந்த செய்தி ஆப்கான் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆய்வு முடிவுகளுக்குப் பின்னரே இறப்பு குறித்த காரணங்கள் தெரியவரும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.