வெளியிடப்பட்ட நேரம்: 19:30 (07/11/2018)

கடைசி தொடர்பு:19:30 (07/11/2018)

`முன்வைத்த காலை பின்வைக்க மாட்டோம்!’ - மைத்திரியிடம் தமிழ்க் கூட்டமைப்பு உறுதி

இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனாவை இன்று சந்தித்துப் பேசிய தமிழ்த் தேசிய கூட்டமைப்புத் தலைவர்கள்,  அவர் கேட்டுக்கொண்டபடி மகிந்த ராஜபக்சேவை ஆதரிக்கத் தங்களால் முடியாது என்று நேரிலேயே உறுதிபடக் கூறிவிட்டனர்.

மைத்திரி

இலங்கையில் தொடரும் அரசியல் குழப்பத்தின் இடையே, அதிபர் மைத்திரியின் அழைப்பின் பேரில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர்கள், அதிபர் செயலகத்தில் இன்று பிற்பகல் அவரைச் சந்தித்தனர். கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில், டெலோ கட்சியின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், பிளாட் கட்சியின் த.சித்தார்த்தன், சுமந்திரன் ஆகியோர்  கலந்துகொண்டனர்.

சந்திப்பின் பின்னர், கூட்டமைப்பின் அதிகாரபூர்வ பேச்சாளர் சுமந்திரன் வெளியிட்ட அறிக்கையில், “நாட்டில் தற்போது நிலவும் சூழ்நிலை தொடர்பில் மிக நீண்ட கலந்துரையாடல் இடம்பெற்றது. அப்போது சில முடிவுகள் எடுக்கப்பட்டதன் பின்னணிகுறித்து தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் குழுவினருக்கு அதிபர் மைத்திரி விளக்கமளித்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினாலும் அதன் நாடாளுமன்ற உறுப்பினர்களாலும் எடுக்கப்பட்ட தீர்மானங்களுக்கான காரணங்களை, அவருக்கு குழுவினர் எடுத்துக் கூறினார்கள். இத்தீர்மானங்கள் ஏற்கெனவே பகிரங்கமாக முழு நாட்டுக்கும், உலகுக்கும் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. தாம் ஏற்கெனவே எடுத்த தீர்மானங்களை மாற்ற முடியாது. அத்தீர்மானங்களின்படியேதாம் செயல்படுவோம் என்றும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் விளக்கிக் கூறினார்கள்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், “அனைத்துக் கட்சிகளினுடைய இணக்கப்பாட்டோடு நாட்டின் அரசியல் சூழ்நிலையைச் சுமுக நிலைக்குக் கொண்டுவருவதற்காக, எதிர்காலத்தில் அதிபர் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு அவரோடு கலந்தாலோசித்தது தமிழ்த் தேசிய கூட்டமைப்பு. தனது முழுமையான ஆதரவைக் கொடுக்கும் என்று கூட்டமைப்புக் குழு குறிப்பாக உறுதியளித்தது. இந்நிலையை விரைவாக அடைவதற்கு, தற்போது யோசித்துள்ள (14-ம்) தேதிக்கு முன்னதான ஒரு தேதியில், நாடாளுமன்றம் கூட்டப்பட வேண்டும் என்று அதிபருக்கு த.தே.கூ. வலியுறுத்தியது. இதைக் கவனமாகப் பரிசீலிப்பதாக அதிபர் உறுதியளித்தார்” என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.